வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!: சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் ஒருவர் உயிரிழந்தார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் வீரத்திற்கு மட்டும் பெயர் பெற்றது என்றால் சிவகங்கை அருகே நடக்கும் கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு வீரத்தோடு மனிதநேயத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் சேர்த்து பெயர் பெற்றது. சிவகங்கை அருகே கண்டிப்பட்டி பழமையான அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை நான்காம் நாள் சப்ர விழாவும், ஐந்தாம் நாள் பொங்கல் விழா, மஞ்சுவிரட்டும் நடக்கின்றன.

இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்து, கிறிஸ்தவ மதத்தினர் இணைந்து இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இந்த வருடமும் போட்டி வழக்கம் போல் நடைபெற்றது. பொதுவாக மஞ்சுவிரட்டு என்பது வெட்ட வெளியில் மாடுகளை ஆங்காங்கே கவிழ்த்து விடுவர். இந்நிலையில், கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் தன்னுடைய மாட்டை அவிழ்த்துவிடுவதற்காக கோவினிப்பட்டடி கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் (56) என்பவர் வந்துள்ளார். அவர் மாட்டை ஒரு கயிற்றில் கட்டிவிட்டுவிட்டு அருகில் பேசி கொண்டிருந்துள்ளார்.

இதனிடையே கயிறு சரிவர கட்டாததால் கயிற்றை விட்டு வெளியேறிய மாடானது வேகமாக வந்து பூமிநாதனின் நெஞ்சில் பாய்ந்துள்ளது. இதில் வலது புறத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது. இதையடுத்து பூமிநாதனை சிவகங்கை அரசு கல்லூரி கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். கண்டிபட்டி மஞ்சுவிரட்டில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தான் வளர்த்த மாடே மார்பில் பாய்ந்து பூமிநாதன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!: சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: