பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. வரும் 25ம் தேதி தைப்பூசத் தேரோட்டம்..!!

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கியது.

பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 8.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம் நாள் திருவிழாவான ஜனவரி 24ம் தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித்தேரோட்டமும் நடக்கிறது. ஜனவரி 25ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 28ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகமும், பழனி நகராட்சி நிர்வாகமும் செய்து வருகிறது. மேலும், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. வரும் 25ம் தேதி தைப்பூசத் தேரோட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: