தேவகோட்டையில் டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை நீடிக்க உத்தரவு

 

மதுரை, ஜன. 19: புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த நாச்சாயி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேவகோட்டை ராம்நகர் தனிச்சாவூரணி சாலையில் புதிதாக டாஸ்மாக் திறக்கும் பணி நடக்கிறது. இதன் அருகே தனியார் பள்ளி மற்றும் கோயில் அமைந்துள்ளன. இவற்றில் இருந்து 100 மீ தொலை விற்குள்ளேயே டாஸ்மாக் அமைத்துள்ளனர்.

இது விதிமீறலாகும். இதனால், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிப்பர். எனவே, இந்த டாஸ்மாக்கை திறக்க தடை விதிக்க வேண்டும். பொது மக்கள் நலன் கருதி டாஸ்மாக் திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கக் கூடாது என்ற மனுவை கலெக்டர் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, டாஸ்மாக் கடை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

The post தேவகோட்டையில் டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை நீடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: