தைப்பட்டத்தை முன்னிட்டு தோட்டக்கலை துறையில் காய்கறி விதைகள் விற்பனை

 

ஈரோடு, ஜன.19: தைப்பட்டத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, ஈரோடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் வினோதினி கூறியதாவது: வீட்டு தோட்டத்தின் மூலமாக நஞ்சில்லா காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பருவந்தோறும் காய்கறி விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடப்பு தைப்பட்டத்தில், வீட்டு தோட்டத்துக்கு தேவையான காய்கறி விதைகள், ஈரோடு வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பவானி கண்ணாடி கத்திரிக்காய், வெண் பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், பச்சை வெண்டை, சிவப்பு பூசணி, கோழி அவரை, தட்டை அவரை, புடலங்காய், பாகற்காய் மற்றும் நாட்டுத் தக்காளி ஆகிய காய்கறிகளின் விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு விதை பாக்கெட் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு தோட்டம் வைத்திருப்போர் தங்களது ஆதார் நகலுடன், ஈரோடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் உள்ள ஈரோடு வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை வார வேலை நாள்களில் நேரில் அணுகி விதை பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தைப்பட்டத்தை முன்னிட்டு தோட்டக்கலை துறையில் காய்கறி விதைகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: