அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா எடப்பாடி மாலை அணிவிப்பை புறக்கணித்த மூத்த நிர்வாகிகள்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் விலகி இருப்பதால் பரபரப்பு

சென்னை: எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்த நிகழ்ச்சிக்கு, மூத்த நிர்வாகிகள் பலரும் வராமல் புறக்கணித்தனர். அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 107வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா சிலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து 107 கிலோ கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி ஊட்டினார்.

நிகழ்ச்சியில், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது தவறாமல் கட்சி தலைமை அலுவலகம் வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கொடியை ஏற்றி வைத்ததுடன், பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்தும்மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். எம்ஜிஆர் பிறந்தநாள் விழா எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் கட்சியின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், வளர்மதி, கோகுலஇந்திரா, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, பொன்னையன், பென்ஜமீன் மற்றும் சென்னை, புறநநகர் பகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன், காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக, எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், எடப்பாடி மீது அவரது கட்சியினர் பலரும் அதிருப்தியில் உள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

அரசு மரியாதை: முன்னதாக, எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலை வளாகத்தில் அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா எடப்பாடி மாலை அணிவிப்பை புறக்கணித்த மூத்த நிர்வாகிகள்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் விலகி இருப்பதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: