ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளாவை நியமித்து கட்சி தலைமை அறிவிப்பு!

திருமலை: ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளாவை நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரியான இவர், YSR தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். அண்மையில் அக்கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக்கொண்டார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் கிடுகு ருத்ரராஜு திடீரென ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஷர்மிளாவை தலைவராக்க தலைமை அறிவித்துள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் களமும் வேகமாக மாறி வருகிறது.

முக்கிய கட்சிகளில் பல்வேறு திருப்புமுனைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரசில் இணைந்தார். அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கப்படும் என பரபரப்பாக கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கிடுகு ருத்ரராஜு நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பியுள்ளார். இந்த பதவி ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதனால்தான் கிடுகு ருத்ரராஜு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம், தெலங்கானா வெற்றிக்கு பிறகு ஆந்திராவில் முற்றிலும் காணாமல் போன காங்கிரஸ், தற்போது கர்நாடகா, தெலங்கானா வெற்றியைபோல் ஆந்திராவிலும் தனது கட்சியின் பலத்தை காட்ட தயாராகி வருகிறது. இதற்கு ஆந்திர அரசியலில் அண்ணன் ஜெகன்மோகன் ஆட்சியை அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை பயன்படுத்தி வீழ்த்த திட்டமிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி மீதான அனுதாபம் மற்றும் அவருக்கு உண்டான ஆதரவு வாக்குகளை ஷர்மிளா மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கூடி விடும் எனக்கருதி, அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இன்னும் சில மாதங்களில் ஆந்திராவில் தேர்தல் வரவுள்ள நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகனுக்கு போட்டியாக ஷர்மிளா களம் இறங்க உள்ளார். ஷர்மிளா காங்கிரஸ் தலைவரானால் மாநிலத்தில் தற்போது எதிர்கட்சியாக உள்ள சந்திரபாபுவின் கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் வரும் தேர்தலில் மறைமுக லாபம் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

The post ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளாவை நியமித்து கட்சி தலைமை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: