மதுரை மாவட்டத்தில் அடுத்த மூன்று நாள் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு திருவிழா ஆரம்பம்: இன்று அவனியாபுரம், நாளை பாலமேடு, நாளை மறுநாள் அலங்காநல்லூர்

அவனியாபுரம்: மதுரை மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேடு, நாளை மறுநாள் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, தைப்பொங்கல் நாளில் மதுரை, அவனியாபுரத்திலும், மறுநாள் மாட்டுப் பொங்கலன்று பாலமேடு, அதற்கடுத்த நாள் அலங்காநல்லூரிலும் நடப்பது வழக்கம். அதன்படி, தென்மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை, அவனியாபுரத்தில் இன்று நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி கடந்தாண்டைப் போல இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்துகிறது. கடந்த 8ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், மேயர் இந்திராணி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவங்கின. கடந்த 6 நாட்களாக நடந்த பணிகள் முடிந்துள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க வாடிவாசல் மாதிரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

விழா மேடை, பார்வையாளர் மேடை துவங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மதுரை மாநகராட்சி சார்பாக ரூ.28.37 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடமாடும் கழிவறை, குடிநீர் தொட்டிகள், எல்இடி திரை வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 4 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுத்தப்படுகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2,400 காளைகளை முன்பதிவு செய்ததில், தகுதியுள்ள ஆயிரம் காளைகளும், 1,318 மாடுபிடி வீரர்களில் 800 பேருக்கும் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. களத்திலும் காளைகளை பரிசோதிக்க கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார் தலைமையில் தலா 6 பேர் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. காளைகள் காயமடைந்தால் மேல் சிகிச்சைக்கென 2 கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்கிறது. மாடுபிடி வீரர்கள் உடல் தகுதி சோதனைக்கும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவர் வினோத் தலைமையில் 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், மேல் சிகிச்சைக்கென மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.

வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு பரிசுப் பொருட்கள் வருவாய் துறையினர் மூலம் உபயதாரர்களிடம் பெறப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த காளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. தீயணைப்பு துறை சார்பாக 2 வாகனங்கள் அனுப்பானடியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று காலை 7.30 மணிக்கு துவக்கி வைக்கிறார். வீரர்களின் உறுதிமொழி ஏற்பிற்கு பிறகு அவனியாபுரம் மந்தையம்மன் கோயில்காளை முதல் காளையாக அவிழ்த்து விடப்படுகிறது.

தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டு, வீரர்கள் களமிறங்குகின்றனர். மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது. பாலமேடு, அலங்காநல்லூரில்… தொடர்ச்சியாக நாளை (ஜன. 16) மதுரை மாவட்டத்தின் பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு 3,677 காளைகள், 1,412 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் உலகப்புகழ் தொட்டிருந்தாலும், கிராமங்கள் அளவில் ‘பெரிய ஜல்லிக்கட்டு’ என பெயர் பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டுதான். அவனியாபுரம், அலங்காநல்லூரில் இல்லாத வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இங்கிருக்கும் விசாலமான மஞ்சமலை ஆற்றுத் திடலில் நடக்கிறது. இந்த பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்த நாள், ஜன. 17ல் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இருக்கிறது. 6,099 காளைகள், 1,784 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்கள் அடுத்தடுத்த வீர விளையாட்டுக்கென தயாராக இருக்கிறது. இந்தக் கிராமங்கள் இன்று துவங்கி 3 நாட்கள் ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் குதூகலம் காண்கின்றன.

 

The post மதுரை மாவட்டத்தில் அடுத்த மூன்று நாள் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு திருவிழா ஆரம்பம்: இன்று அவனியாபுரம், நாளை பாலமேடு, நாளை மறுநாள் அலங்காநல்லூர் appeared first on Dinakaran.

Related Stories: