தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் பிஎஸ்என்எல் 4ஜி சேவை: தமிழ்நாடு தலைமை பொதுமேலாளர் தமிழ்மணி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலக்கத்தில் தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் தமிழ்மணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2902 தாலுகாக்கள், 17231 கிராம வருவாய்ப் பகுதிகளிலும் தமிழ்நாடு தொலைத் தொடர்ப்பு மூலை முடுக்குகள், மலைசார்ந்த இடங்களிலும் பைபர் சேவை விரைவாக இணைக்கப்படுகிறது. தற்போது சுமார் 4.45 லட்சம் பைபர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாதம்தோறும் 16,000 புதிய இணைப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது தமிழ்நாட்டில் 5803 செயல்படும் 2ஜி, 3ஜி தளங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் 4ஜி சேவை வழங்கும் திறனுள்ளவைகளாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் புதியதாக 569 4ஜி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்டதக்க இடங்களில் 5ஜி சேவை அளிக்கப்படும் போது அந்த சேவையை வழங்கத் திறனுள்ளவைகளாக மேம்படுத்த முடியும். 4ஜி சேவைக்கான பணிகள் தமிழகத்தில் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் 4ஜி வரும் ஏப்ரல் மாதத்தில் முதல் பயன்பாட்டிற்கு வரும். இதனால் 2ஜி, 3ஜி சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை பெறுவதற்கு அருகில் உள்ள சேவை மையங்களில் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் பிஎஸ்என்எல் 4ஜி சேவை: தமிழ்நாடு தலைமை பொதுமேலாளர் தமிழ்மணி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: