ஒரே நாடு, ஒரே தேர்தலை ஏற்க முடியாது: மம்தா

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை ஏற்று கொள்ள முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை ஏற்று கொள்ள முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து உயர்மட்ட குழுவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கடந்த 1952ம் ஆண்டு நடந்த முதலாவது பொது தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் இந்த நடைமுறை மாறியது.

பதவி காலம் முடியாமல் உள்ள சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கு நிர்பந்திக்கக்கூடாது. இது எம்எல்ஏக்களை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்துள்ள மக்களின் அடிப்படை நம்பிக்கையை மீறுகின்ற செயல். ஒன்றிய அரசு, மாநில அரசுகள் பல்வேறு காரணங்களால் தங்கள் பதவி காலத்தை முடிக்காமல் இருக்கலாம். கடந்த 50 ஆண்டுகளில் மக்களவை பதவி காலத்துக்கு முன்பே பல முறை கலைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் புதிதாக தேர்தல் நடத்துவதே ஒரே வழி என குறிப்பிட்டுள்ளார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தலை ஏற்க முடியாது: மம்தா appeared first on Dinakaran.

Related Stories: