விவசாயிகள் தங்களுடைய விளைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு 5 மாவட்ட விவசாயிகளுக்கு விளைபொருள் ஏற்றுமதி கருத்தரங்கம்

வேலூர், ஜன.10: விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று காட்பாடியில் நடந்த 5 மாவட்ட விவசாயிகளுக்கான கருத்தரங்கில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கான வேளாண் விளைபொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி குறித்த இந்த கருத்தரங்கு மிகவும் இன்றியமையாதது முக்கியமானது. இந்த கருத்தரங்கில் முழு நேரமும் அமர்ந்து வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஏனெனில் நானும் ஒரு விவசாயியாக இருந்தவன். என்னுடைய பெற்றோர்களும் விவசாயம் செய்தவர்கள். விவசாய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் தான் நல்ல பொருளாதாரத்தை ஈட்ட முடியும். வெளிநாடுகளுக்கு வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் பொழுது அவற்றை அவர்கள் எதிர்பார்க்கின்ற வகையில் தரமான முறையில் மதிப்பு கூட்டி அனுப்ப வேண்டும்.

கேரளா, மும்பை மற்றும் கல்கத்தா பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய விலைப் பொருட்களை எவ்வாறு ஏற்றுமதி செய்து அதை லாபகரமாக நடத்தலாம் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகள் இதில் சற்று பின்தங்கியே உள்ளனர். விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்களை வழங்குவதற்கான இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகவும் சிறந்த ஒரு திட்டமாகும். வெளிநாடுகளில் அருகம்புல் முதற்கொண்டு அனைத்து வகையான விவசாய பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக முள்ளங்கி, கர்ணைக்கிழங்கு, கீரை, முருங்கைக்காய் ஆகியவற்றிற்கு ஏற்றுமதியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே விவசாயிகள் ஏற்றுமதி குறித்த விவரங்களை அறிந்து கொண்டு தங்களுடைய விளைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். அரசின் சார்பில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் விவசாயிகள் எந்த நேரத்திலும் என்னை அணுகி அது தொடர்பாக கேட்கலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்பிகள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், வேளாண் விற்பனை துணை இயக்குனர்கள் கலைச்செல்வி, ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் தங்களுடைய விளைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு 5 மாவட்ட விவசாயிகளுக்கு விளைபொருள் ஏற்றுமதி கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: