உடன்பிறப்பே என்னும் தன் வெண்கலக் குரலால் தொண்டர்களையெல்லாம் கட்டிப்போட்டவர் கலைஞர்: இசையாய் கலைஞர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: உடன்பிறப்பே என்னும் தன் வெண்கலக் குரலால் தொண்டர்களையெல்லாம் கட்டிப்போட்டவர் கலைஞர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் – கலைஞர் குழு சார்பில் `இசையாய் கலைஞர்’என்ற நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: அரசு சார்பில் ரூ.250 கோடி செலவில் கலைஞர் பெயரில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.250 கோடி மதிப்பில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் கலைஞர் நூற்றாண்டில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ எனும் மகத்தான திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த நம் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

எங்களுடைய இளைஞர் அணிக்கு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று எனும் விதத்தில் கலைஞர் பெயரில் கலைஞர் நூலகம் அமைத்தல் கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டிகள் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டிகளை நடத்துமாறு முதல்வர் கட்டளையிட்டிருந்தார். ஏற்கனவே இந்த மூன்று மாதங்களில், இளைஞர் அணி சார்பில், 15 கலைஞர் நூலகங்களை தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் திறந்திருக்கிறோம். இந்திய ஒன்றியத்திலேயே வேறு யாருக்கும் இல்லாத வகையில், கலைஞருக்கு ஏராளமான முகங்கள் உண்டு. பத்திரிகையாளர் – எழுத்தாளர் – அரசியல் மேதை – திரைக்கதை வசனகர்த்தா என ஏராளமான முகங்கள் உண்டு. அதில் மிக முக்கியமான ஒரு முகம்தான், அவருக்கு இசை மீது உள்ள ஆர்வம். இசை மீதும் இசைக் கலைஞர்கள் மீதும் தனிப்பிரியம் உண்டு. எனவேதான் ‘இசையாய் கலைஞர்’ என்ற இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்று எங்களின் கலைஞர் – கலைஞர் குழு சார்பில் முடிவெடுத்து சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறோம்.

மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையும் அறியாமல் ஒரு கலையுணர்வு இருக்கும் என்று சொல்வார்கள். அதே மாதிரிதான், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் நினைவிலும் கலைஞர் கண்டிப்பாக நிறைந்திருப்பார். இந்த நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ‘இசையாய் கலைஞர்’ என்பது மிகமிக பொருத்தமான தலைப்பு.ஒரு மனிதனை உணர்ச்சிப் பெருக்கால் வெகுண்டெழச் செய்யும் வல்லமை இசைக்கு உண்டு. அந்த ஆற்றல் கலைஞர் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கள்படும் துயரை இசையின் மூலமாகவே வெளிப்படுத்தினார்கள். அவர்களின் துயரைப் போக்க தனது பேனாவால் போரிட்டவர் கலைஞர் அவர்கள்.காயம்பட்ட மனதை இசை ஆற்றும். அதுபோல், சமுதாய இழிவால் காயம்பட்டிருந்த மக்களுக்கு தனது எழுத்தாலும் – அரசியலாலும் மருந்துப் போட்டவர் கலைஞர் அவர்கள். மகிழ்ச்சியில் உங்களை இசை துள்ள வைக்கும்.

கலைஞர் அவர்களின் முகம் பார்த்தாலே நம் உடன்பிறப்புகள் துள்ளி குதிப்பார்கள்.ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப இசை பரிணாம வளர்ச்சியும், மாற்றமும் அடையும். அதேபோல், கையெழுத்துப் பிரதியாக முரசொலியைத் தொடங்கி, ட்விட்டர் காலம் வரை மாற்றத்தை உள்வாங்கி வளர்ந்தவர் கலைஞர் அவர்கள். இசைக்கு நல்ல குரல்வளம் தேவை. ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழர்களை ஆட்கொண்டது ‘உடன்பிறப்பே’என்றழைத்த கலைஞர் அவர்களின் வெண்கலக் குரல் தான். எனவே, இசையின் குணங்கள் அனைத்தையும் தனக்குள்ளே பெற்றவர் தான் நமது கலைஞர் அவர்கள். எனவே தான், இசையாய் கலைஞர் என்னும் தலைப்பு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.”இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கவிஞர் யுகபாரதி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் இருவரும் கலைஞரின் பாடல்கள் குறித்து உரையாற்றினர். , தமிழ்நாடு இயல் – இசை – நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் நன்றியுரையாற்றினார். அதன்பிறகு இசையமைப்பாளர் தாயன்பனின் ‘பல்லவி இசைக்குழு’வின் சார்பில் கலைஞரின் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பாடப்பட்டன.

அந்த இசை நிகழ்ச்சியை கவிஞர் நெல்லை ஜெயந்தா தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கலைஞர் கலைஞர் குழுவின் உறுப்பினர் செயலர் எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு இயல் – இசை – நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, அரவிந்த்ரமேஷ், மயிலை வேலு, காரம்பாக்கம் கணபதி, ஜெ.கருணாநிதி, கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, இளைய அருணா, மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயா, இசைப் பள்ளிகளுக்கான கலையியர் அறிவுரைஞர் ஜாஹிர் உசேன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் பிரகாஷ், ராஜா அன்பழகன், லோகேஷ், மதன்குமார், பகுதிக் கழக செயலாளர்கள் உள்பட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post உடன்பிறப்பே என்னும் தன் வெண்கலக் குரலால் தொண்டர்களையெல்லாம் கட்டிப்போட்டவர் கலைஞர்: இசையாய் கலைஞர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: