ஹர்திக் பாண்டியா இனி கேப்டனாவது கடினம்: ஆகாஷ் சோப்ரா சொல்கிறார்

மும்பை:இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பங்கேற்கவில்லை. அப்போது இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் ஒதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அதே சமயம், பிசிசிஐ, ஹர்திக் பாண்டியாவை டி20 அணியின் நிரந்தர கேப்டனாக்க முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் இடையே காயம் ஏற்பட்டு தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். அவரால் ஐபிஎல் தொடர் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது என கூறப்படுகிறது.

இதனிடையே 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் தாங்கள் பங்கேற்க விரும்புவதாக ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி பிசிசிஐ-யிடம் தெரிவித்தனர். அதனால், அடுத்து நடக்க உள்ள ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்ததோடு கேப்டனாகவும் நியமித்து இருக்கிறது பிசிசிஐ. அதன் மூலம் டி20 அணியின் பல்வேறு திட்டங்கள் அடியோடு மாறி இருக்கிறது. முக்கியமாக பாண்டியாவின் கேப்டன்சி கேள்விக் குறியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கி இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்து உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பங்கேற்க வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

சிலர் பாண்டியா அணிக்கு திரும்பினால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “ரோஹித் சர்மா தான் இப்போது டி20 அணியின் கேப்டன். அவர் உலகக்கோப்பை தொடரிலும் கேப்டனாக இருப்பார் என நான் நம்புகிறேன். ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினாலும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். இதை நான் எழுதிக் கூட தருகிறேன். ரோஹித் சர்மா அணியில் இருப்பதால், ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆவது மிகவும் கடினம்” என்றார்.

The post ஹர்திக் பாண்டியா இனி கேப்டனாவது கடினம்: ஆகாஷ் சோப்ரா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: