மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தினால் அனைத்து தேர்தலிலும் பா.ஜதான் வெற்றி பெறும்: சத்யபால் மாலிக், கபில் சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலில் தற்போதைய வடிவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தினால் அனைத்து தேர்தல்களிலும் பாஜ தான் வெற்றி பெறும் என்பது தனது நம்பிக்கை என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால்மாலிக் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் மோடி அரசை விமர்சனம் செய்து வரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால்மாலிக், மூத்த அரசியல் தலைவர் கபில்சிபல் எம்பியுடன் யூடியூப் நிகழ்ச்சியில் உரையாடினார்.

அப்போது அவர் கூறும்போது,’ ஒவ்வொரு தேர்தலிலும் இத்தனை இடங்களை பிடிப்போம் என்று பா.ஜ அறிவித்து, அதன்படியே வெற்றி பெறுவதை யாராவது கவனித்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் புரிய வரும். எனது அனுமானத்தை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், இந்த இயந்திர முறை ஒழியும் வரை, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது. எதிர்க்கட்சிகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவித அழுத்தத்தில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால் எங்களுக்கு சந்தேகம் எழும்போதும், நீங்கள் ஏன் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தக்கூடாது?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கபில்சிபல் கூறும்போது,’ எனக்கு ஒரு சந்தேகம் இருந்தால், எனது வாக்கு விரும்பிய நபருக்கு அளிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய விரும்பினால், அதை அறிவது எனது அரசியலமைப்பு உரிமை. தேர்தல் ஆணையம் இதை ஏற்கவில்லை, நீதிமன்றமும் இதை ஏற்கவில்லை. மின்னணு எந்திரத்தில் தவறு நடக்கிறது என்று என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால் மக்களுக்கு சந்தேகம் இருந்தால் விவிபேட்களை முழுமையாக எண்ணுவதில் என்ன பிரச்னை?. அப்படி இல்லாதபட்சத்தில் வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும்’ என்றார்.

The post மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தினால் அனைத்து தேர்தலிலும் பா.ஜதான் வெற்றி பெறும்: சத்யபால் மாலிக், கபில் சிபல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: