மிக்ஜாம் புயல் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருமழையை ெகாட்டித் தீர்த்தது. அதனால் 4 மாவட்டங்களிலும் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதையடுத்து, தற்போது அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட அறிவிப்பின்படி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அந்த வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்கள் விரும்பினால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி மாதம் பொங்கல், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்கள் வருவதை அடுத்து, மீதம் உள்ள வார நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்தில் இன்றும் (6ம் தேதி), 20ம் தேதியும், பிப்ரவரி மாதத்தில் 3, 17ம் தேதிகளிலும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: