காங்கிரஸில் இணைந்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா : விரைவில் ராஜ்யசபா சீட் வழங்க கட்சி மேலிடம் முடிவு!!

திருமலை: ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸில் இணைந்தார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா. இவர் ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை தொடங்கி பாத யாத்திரை மேற்கொண்டு அம்மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருந்தார். ஆனால் வாக்குகள் பிரிவதை விரும்பாத சர்மிளா, தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னதாகவே தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைய அவர் திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், தெலங்கானா தேர்தலுக்கு பின்னர் இணைந்து கொள்ள அறிவுறுத்தியது.

அதற்கேற்ப சர்மிளா, தெலங்கானா சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தின்போது பிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகரராவை மட்டுமே குறி வைத்து பேசினார். அதற்கேற்ப தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற நிலையில் சர்மிளாவை காங்கிரசில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி டெல்லிக்கு வந்து தங்களை சந்தித்து காங்கிரசில் இணையும்படி கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது.

இதையடுத்து நேற்று காலை அவர் ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். சர்மிளாவுக்கு சால்வை அணிவித்து கார்கே, ராகுல் ஆகியோர் வரவேற்றனர். தாம் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார் சர்மிளா. மேலும் தனது மகனின் திருமண அழைப்பிதழை சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு வழங்கினார்.

இதனிடையே காங்கிரசில் இணைய உள்ள சர்மிளாவுக்கு, விரைவில் ராஜ்யசபா சீட் வழங்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்மிளாவுடன் காங்கிரசில் இணைய உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாம்.

The post காங்கிரஸில் இணைந்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா : விரைவில் ராஜ்யசபா சீட் வழங்க கட்சி மேலிடம் முடிவு!! appeared first on Dinakaran.

Related Stories: