பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து குறைகளும் சரி செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து குறைகளும் சரி செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வால் டாக்ஸ் சாலை யானைகவுனி காவல் நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து 48 மணி நேரம் தான் முடிந்து உள்ளது. நேற்று குடிநீர், கழிவறை என அனைத்தையும் ஆய்வு செய்தோம் நன்றாக தான் உள்ளது. முன்னர் கோயம்பேட்டில் இருந்து தென்மாட்டவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதால் முன்பதிவு செய்து இருந்தவர்கள் கூடுதல் கட்டணத்தை மீண்டும் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று பயணிகளுக்கு நடத்துனர் மூலம் வழங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திற்கு அனைத்து பகுதியில் இருந்தும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து நிலையம் சற்று தொலைவில் இருப்பதாக சிலர் தெரிவித்தனர். அதற்கு துறையின் செயலாளர் ஆய்வு செய்து கூடுதலாக பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விரைவில் அந்த பேருந்து நிலையத்திற்கு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க இருக்கிறோம். 2 அல்லது 3 நாட்களில் அனைத்து கோரிக்கையும் நிறைவு செய்யப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்க தனியாருக்கு முறையாக தான் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. தேவையான உணவகம் ஏற்கனவே உள்ளே உள்ளது. இருப்பினும் அம்மா உணவகம் தேவை என்றால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து குறைகைகளும் சரி செய்யப்படும். இருப்பினும் ஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களிடம் தெரிவித்தால் அதனை உடனடியாக சரி செய்யப்படும். மேலும் சிஎம்டிஏ சார்பில் ரயில்வே நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திறந்தோம் என்று இருக்காமல் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து குறைகளும் சரி செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: