நியூசி. – வங்கதேசம் டி20 தொடர் சமன்

மவுன்ட் மவுங்கானுயி: வங்கதேச அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், டிஎல்ஸ் விதிப்படி 17 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. நேப்பியரில் நடந்த முதல் டி20ல் வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. மவுன்ட் மவுங்கானுயி, பே ஓவல் மைதானத்தில் நடந்த 2வது டி20 போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது (நியூசி. 11 ஓவரில் 72/2).

இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 அதே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச, வங்கதேசம் 19.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான்டோ 17, தவ்ஹித் 16, அபிப் உசைன் 14, ரோனி, ரிஷத் தலா 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சான்ட்னர் 4, சவுத்தீ, மில்னே, பென் சியர்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்த நிலையில், மழை கொட்டியதால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, டிஎல்எஸ் விதிப்படி நியூசி. 17 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஃபின் ஆலன் 38, நீஷம் 28*, கேப்டன் சான்ட்னர் 18* ரன் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. சான்ட்னர் ஆட்ட நாயகன் விருதும், ஷோரிபுல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post நியூசி. – வங்கதேசம் டி20 தொடர் சமன் appeared first on Dinakaran.

Related Stories: