ரூ.394 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: தினசரி 2,310 பஸ்களை இயக்க திட்டம்: ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் பயன்படுத்தலாம்

சென்னை: கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்.சென்னையில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் சென்னை புறநகரில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக பேருந்து நிலையத்துடன் கூடிய முனையம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

இதையடுத்து 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்தநிலையில் திறக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், பஸ் நிலையத்தின் முன்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் வெளியேற முடியாமல் தேங்கியது. இதையடுத்து மீண்டும் பஸ் நிலைய வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டது. 1,200 மீட்டர் தூரத்துக்கு மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முழுவதுமாக முடிந்தன. இதையடுத்து பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 840 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தை ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்த முடியும். இங்கு, பயணிகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகளை வாங்க மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடையற்ற மின்சார வசதி, பேருந்து நிலையங்களுக்கு தேவையான பெட்ரோல் – டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. மேலும், புறகாவல்நிலையம் நிரந்தரமாக அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து வைத்து பேட்டரி வாகனம் மூலமாக பஸ் நிலையத்தை சுற்றி பார்க்க உள்ளார். அதன்பிறகு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் சென்னையில் வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரூ.394 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: தினசரி 2,310 பஸ்களை இயக்க திட்டம்: ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் பயன்படுத்தலாம் appeared first on Dinakaran.

Related Stories: