காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.378 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் காந்தி வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில், நெசவாளர்களுக்கு, ரூ.378 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், தமிழ்நாடு ஜரிகை ஆலை புனரமைக்கப்பட்ட புதிய அலுவலக வளாகம், கோ-ஆப்டெக்ஸ் புதிய சேமிப்பு கிடங்கு, நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் கைத்தறி தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், நெசவாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினரை கைத்தறி தொழிலில் ஈடுபடுத்தவும், இத்தொழில் சார்ந்த உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசால் பல்வேறு சீரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், 2022-23ம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டவாறு, காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு ஜரிகை ஆலையில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய அலுவலக வளாகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் புதிய சேமிப்பு கிடங்கினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

பின்னர், ரூ.1.15 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஜரிகை ஆலை சுற்றுச்சுவர், தொழிலாளர்களுக்கு சிற்றுண்டி சாலை, இருசக்கர வாகன நிறுத்தம் கட்டிடம் மற்றும் ஓய்வு அறைக்கான அடிக்கல்லினையும் நாட்டினார். மேலும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தில் 100 பயனாளிகளுக்கு, பயிற்சி சான்றிதழ்களும், நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.156 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும்,

130 பயனாளிகளுக்கு ரூ.111 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் முத்ரா கடனுதவியும், 30 பயனாளிகளுக்கு ரூ.45.17 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் நலத்திட்ட உதவிகளும், 62 பயனாளிகளுக்கு ரூ.9.81 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்டமும், 22 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.56.89 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு சரிகை ஆலையில் ஜரிகை கொள்முதல் செய்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மார்க் 1க்கு ரூ.200 வீதம் ஊக்கத்தொகை என மொத்தம் 383 நெசவாளர் பயனாளிகளுக்கு ரூ.3,78.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

இவ்விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆனந்தகுமார், கைத்தறி துறை ஆணையர் விவேகானந்தன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,

காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், தமிழ்நாடு ஜரிகை ஆலையின் மேலாண்மை இயக்குநர் கிரிதரன், காஞ்சிபுரம் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை செயலாட்சியர் கணேசன், இணை இயக்குநர் (சீருடை) முனுசாமி, கைத்தறி துறை துணை இயக்குநர் (மு.கூ.பொ) ஸ்ரீதரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.378 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: