நந்தியம்பாக்கம் ஊராட்சியில் கால்வாய் அமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதியின் கோரிக்கையை ஏற்று மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை தண்ணீரை வெளியேற்ற கால்வாய் அமைப்பது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் கொங்கை அம்மன் நகர் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் மழைக்காலங்களில் ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாய்கள் வழியாகத்தான் மழை நீர் செல்ல வேண்டும்.

ஆனால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் நந்தம்பாக்கம் ஊராட்சி கொங்கை அம்மன் நகரைச் சுற்றி உள்ள குடியிருப்புகளை தண்ணீர் தேங்கி விடுகிறது. இது சம்பந்தமாக நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கலாவதி கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்ட பொறியாளர் ராஜவேல் நந்தியம்பாக்கம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, பேரூராட்சி மன்றத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரஜினி, ராஜன், மேற்பார்வையாளர் கோபி மற்றும் நந்தியம்பாக்கம் கிராம நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிகாரிகள் கொங்கியம்மன் நகர் பகுதியில் சென்று மழை தண்ணீர் தேங்கி நின்று வெளியேற முடியாமல் இருக்கும் பகுதிகளை பார்வையிட்டனர். பல நாட்களாக தேங்கி நின்ற மழை தண்ணீரை அதிகாரிகள் பார்வையிட்டு, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்தனர். மேலும் உடனடியாக தற்காலிக சீரமைப்புப் பணியை தொடங்க பணியாளர்களுக்கு பேரூராட்சி உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.

The post நந்தியம்பாக்கம் ஊராட்சியில் கால்வாய் அமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: