காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?

கோயில் அல்லது வீட்டில் உள்ள பிள்ளையார் முன்பு பெண்கள் தோப்புக்கரணம் போடலாமா?
– வெங்கட்ராமன், செகந்திராபாத்.

இரு கரங்களால் தலையில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போட்டு வணங்குவதும் பிள்ளையாருக்கு உரிய வழிபாட்டு முறையாக பெரியவர்களால் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த முறைக்கு ஆண், பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கோயில் அல்லது வீட்டில் உள்ள பிள்ளையார் முன்பு பெண்கள் தாராளமாக தோப்புக்கரணம் போட்டு வணங்கலாம். இதில் தவறேதும் இல்லை.

கோயில்களில் சிலர் தன்னைத்தானே சுற்றி வணங்குகிறார்களே, இது சரியா?
– கே.விஸ்வநாத், அல்சூர்.

சரியே. ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்கிறது ஆதிசங்கரரின் அத்வைத தத்துவம். அதாவது, நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறான். கடவுள் வேறு, நாம் வேறு அல்ல, நமக்குள்ளேயே இருக்கும் பரம்பொருளை நாம் உணர வேண்டும் என்பதற்காகவே தன்னைத்தானே சுற்றி வணங்குகிறார்கள். அதே நேரத்தில், கோயில்களுக்குச் செல்லும்பொழுது இறைவனின் சந்நதியையும் வலம் வந்து வணங்க வேண்டும். அதோடு, தன்னைத்தானே சுற்றி வணங்குவதிலும் தவறில்லை. இதனை, அறிவியல் பூர்வமாக உணர்த்தும் விதமாக நாம் வாழுகின்ற இந்த பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. தனக்குள் உறையும் பரம்பொருளை உணர்ந்துகொள்ளும் விதமாக மனிதன் தன்னைத்தானே சுற்றி வணங்குவதில் எந்தவிதமான தவறும் இல்லை.

லவ்பேர்ட்ஸ் எப்போதும் கத்திக் கொண்டே இருப்பது வீட்டிற்கு ஆகாது என்கிறார்களே, இது உண்மையா?
– மல்லிகா அன்பழகன், சென்னை.

லவ்பேர்ட்ஸ் மட்டுமல்ல, கிளி உள்பட எந்த பறவையினத்தையும் கூண்டில் அடைத்து வைத்திருப்பது வீட்டிற்கு ஆகாது. ‘சுதந்திரப் பறவை’ என்று சொல்வார்கள். அந்தப் பறவையையே அடைத்து வைப்பது என்ன நியாயம்? இவ்வாறு அடைத்து வைக்கப்படும் பறவைகள் சுதந்திரத்திற்காக கத்திக்கொண்டே இருப்பது வீட்டில் தெய்வீக அலைகளை நிச்சயமாகத் தடைசெய்யும். இவ்வாறு பறவைகள் கத்திக் கொண்டே இருக்கும் இல்லங்களில் சண்டையும், சச்சரவும்தான் பெருகும். மாறாக, புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக பறக்கவிட்டு வளர்ப்பவர்களும் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். இவ்வாறு பறந்து திரிந்துகொண்டிருக்கும் பறவைகளுக்கு தினசரி ஆகாரம் தரும் இல்லங்களில் பிரச்னை ஏதும் உருவாகாது. லவ்பேர்ட்ஸ், கிளி போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து, அவை எப்போதும் கத்திக்கொண்டே இருந்தால் நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?
– எஸ்.குமாரசுப்ரமணியம், பண்ருட்டி.

“ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்” என்பது காயத்ரி மந்திரம். ஓங்காரப் பரம்பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தியையும், சக்தியையும் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்ற பகவானுடைய சிறந்த ஜ்யோதி ஸ்வரூபத்தை விடாமல் தொடர்ந்து தியானிக்கின்றேன் என்பது இதன் பொருள். ‘உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய தேவனே, உன்னை விடாது தியானிக்கிறேன். எனக்கு அறிவுக் கூர்மையையும், மனோதைரியத்தையும் தந்தருள்வாயாக’ என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: