தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி வரை மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை பெய்தது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் டிசம்பர் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் 26ம் தேதி வரை பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதி கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி வரை மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: