கிறிஸ்துமஸ், திருமண விழாவிற்காக கேரளாவுக்கு 30 லட்சம் வெள்ளை ரோஜாக்கள்-அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரம்

ஓசூர் : கிறிஸ்துமஸ் மற்றும் திருமண விழாவிற்காக, ஓசூரில் இருந்து கேரள மாநிலத்திற்கு 30 லட்சம் வெள்ளை ரோஜாக்கள் அனுப்பி வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால், மலர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

அறுவடைக்கு பின், அதனை ஓசூர் மலர் சந்தைக்கு கொண்டு சென்று,அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். குறிப்பாக ஓணம் பண்டிகையின் போது, கேரளா மாநில மக்கள் வெள்ளை சாமந்தியை அதிகம் விரும்புவதால், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, சுமார் ஆயிரம் டன்னுக்கு மேல் விற்பனைக்கு அனுப்புகின்றனர். அதே போல் கிறிஸ்துமஸ், திருமண விழாவிற்கு கேரளாவில் வெள்ளை ரோஜாவை அதிகம் பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் 20 லட்சம் மலர்களை அனுப்புகின்றனர்.

இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்காக, பாகலூர் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில், 30 லட்சம் வெள்ளை ரோஜாக்களை சாகுபடி செய்துள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், வெள்ளை ரோஜாக்களை பறித்து, குளிர்ந்த அறையில் பதப்படுத்தி வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாகலூர் விவசாயி ஹரீஸ் கூறியதாவது:
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், இந்துக்கள் பண்டிகையில் மஞ்சள் சாமந்தியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதே போல் திருமண நிகழ்ச்சியில் ரோஜாக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகையின் போது, வெள்ளை சாமந்திக்கும், கிறிஸதுமஸ் மற்றும் திருமண விழாவிற்கும் வெள்ளை ரோஜாவிற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், ஓசூர் பகுதியில் ஓணம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பசுமை குடில் மூலம் சுமார் 500 ஏக்கரில் வெள்ளை ரோஜா சாகுபடி செய்து, கேரளாவிற்கு அனுப்புகிறோம். தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் கேரளா மக்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழா முடிந்து, அடுத்த நாள் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை கிறிஸ்தவர்கள் திருமணம் நடைபெறும். இதனால் வெள்ளை ரோஜா பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

ஆர்டரின் பேரில், நடப்பாண்டு 30 லட்சம் வெள்ளை ரோஜாக்களை உற்பத்தி செய்து, கேரளாவிற்கு அனுப்ப உள்ளோம். இதற்காக வெள்ளை ரோஜா, மேடை அலங்காரத்திற்கு வெள்ளை ஜெர்பரா, பொக்கேவிற்கு பயன்படுத்தும் வெள்ளை ஜிப்சோபிலா ஆகிய மலர்களை அறுவடை செய்து, கவர்கள் மூலம் பேக் செய்து, குளிர்ந்த அறையில் அடுக்கி வைத்துள்ளோம். நாளை முதல் கேரளாவிற்கு அனுப்ப உள்ளோம்.

தற்போது மார்கழி மாதம் என்பதால், ஓசூர் பகுதியில் உற்பத்தி செய்யும் ரோஜா 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு, உள்ளூரில் ₹50க்கு விற்பனையாகிறது. ஆனால், கேரளாவில் சீசனுக்கு ₹200க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கிறிஸ்துமஸ், திருமண விழாவிற்காக கேரளாவுக்கு 30 லட்சம் வெள்ளை ரோஜாக்கள்-அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: