ஜனநாயக முறையில் அரசு நடந்து கொள்ள வேண்டும், நாடாளுமன்ற சிறப்புரிமையை மோடி மீறி விட்டார்: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமர் மோடி அவைக்கு வௌியே பேசியது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய செயல் என காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் ஒருபகுதியாக நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக சென்ற எதிர்க்கட்சியினர், “நாடாளுமன்றம் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது, ஜனநாயகம் வௌியேற்றப்பட்டுள்ளது, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

தொடர்ந்து விஜய் சவுக்கில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ஜனநாயகத்தில் பேசுவது உரிமை. நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பேச மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் மக்களின் உணர்வுகளை தெரிவிப்பது எங்களின் கடமை. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு யார் பொறுப்பு? இதுகுறித்து அவையில் நாங்கள் பிரச்னை எழுப்ப விரும்பினோம். எங்களை பேச அனுமதிக்காமல் பிரச்னை எழுப்பிய உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த விவாகாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டிய இருவரும் வராதது துரதிருஷ்டவசமானது. இதைப்பற்றி பிரதமர் மோடி மக்களவை, மாநிலங்களவையில் பேசாமல் வாரணாசி, அகமதாபாத்தில் டிவியில் பேசுகிறார். இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய செயல். இதை கண்டிக்கிறோம். ஜனநாயக முறையில் அரசு நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

The post ஜனநாயக முறையில் அரசு நடந்து கொள்ள வேண்டும், நாடாளுமன்ற சிறப்புரிமையை மோடி மீறி விட்டார்: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: