இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவை அடுத்து மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவிப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவை அடுத்து மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார். மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் என்பவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணை தலைவராக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அது நிறைவேறவில்லை எனவும் சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சாக்ஷி மாலிக் கூறியதாவது; “மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக ஒரு பெண்ணை தலைவராக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அது நிறைவேறவில்லை. பெண் தலைவராக இருந்தால் துன்புறுத்தல் நடக்காது. இன்று ஒரு பெண்ணுக்குப் பதவி வழங்கப்படவில்லை.

நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம், நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் எங்களுக்கு ஆதரவாக வந்தனர். நாங்கள் முழு பலத்துடன் போராடினோம், ஆனால் இந்த போராட்டம் தொடரும். புதிய தலைமுறை மல்யுத்த வீரர்கள் போராட வேண்டும்.

பிரிஜ் பூஷன் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தால், நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” என கூறிவிட்டு அழுதுகொண்டே செய்தியாளர் சந்திப்பில் இருந்து சாக்ஷி மாலிக் எழுந்து சென்றார். மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

The post இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவை அடுத்து மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: