மதிப்பெண், இடப்பெயர்வு சான்றுக்கு புதிய இணையம் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, தீர்வு புத்தகங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

சென்னை:பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், தொடக்க கல்வித்துறை, தேர்வுத்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று காலை தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். முன்னதாக, தேர்வுத்துறையில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணைய வழி விண்ணப்பம் பெறும் சேவை, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான வினாவங்கி, தீர்வுப் புத்தகங்கள் ஆகியவற்றை அமைச்சர் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: அரசுத் தேர்வுகள் துறையில் இதுவரை அனைத்து விண்ணப்பங்களும் தபால் வழியில் பெறப்பட்டு மதிப்பெண் சான்றுகளின் இரண்டாம்படி, மதிப்பெண் பட்டியல்களின் சான்றிட்ட நகல், இடப்பெயர்வு சான்று ஆகியவற்றை வழங்கி வந்தோம். தற்போது மேற்கண்ட சான்றுகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியில் பெறப்பட்டு 15 நாட்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயார் நிலையில் உள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வினா வங்கி, தீர்வுப் புத்தகம், கம்-புக் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அச்சிட்டு இன்று (நேற்று) முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலகங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 வகுப்புக்கான அறிவியல் மற்றும் கலைப் பிரிவுக்குரிய மாதிரி வினாத்தாள் தொகுப்பு, இயற்பியல் பாடத்துக்கான தீர்வுப் புத்தகம் (4 புத்தகங்கள்) தமிழ் மற்றும் ஆங்கில வழியில் விரைவில் வெளியிடப்படும். மழை காரணமாக ஆண்டுப் பொதுத் தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. மழைக்காக விடுமுறை விடப்பட்டதால் அனைத்து மாணவர்களுக்கும் சனிக் கிழமைகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post மதிப்பெண், இடப்பெயர்வு சான்றுக்கு புதிய இணையம் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, தீர்வு புத்தகங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: