லாட்ஜில் போதை ஊசி செலுத்தி மாணவன் உயிரிழந்த விவகாரம்; போதை மாத்திரை சப்ளை செய்த மும்பையை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை: சென்னை சூளை தட்டாங்குளம் சந்தியப்பன் ெதருவை சேர்ந்தவர் ராகுல்(19). இவர் சூளையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 25ம் தேதி தனது பெற்றேரிடம் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள செல்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். பிறகு தனது நண்பர்களுடன் அண்ணாசாலை உட்ஸ் சாலையில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் போதை மாத்திரை மற்றும் போதை ஊசியை உடலில் செலுத்தியுள்ளார். இதில் போதை தலைக்கேறி அவர் மயங்கி விழுந்தார். இதனால் அச்சமடைந்த லாட்ஜ் மேலாளர் செல்வம் உடனே 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு உள் நோயாளியாக தீவிர சிகிச்சை பெற்று வந்த ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கல்லூரி மாணவன் உடன் அறையில் தங்கிய ஆகாஷ்(21), மணிகண்டன்(எ)சஞ்சய்(19), மணிகண்டன்(21) மற்றும் 2 சிறுவர்கள் போதை மாத்திரை அதிகளவில் பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சா, 15 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்தியதாக 5 பேரை கைது செய்தனர். பிறகு அவர்கள் அளித்த தகவலின்படி, போதை மாத்திரை விற்பனை செய்த பட்டாளம் டிமலஸ்சாலையை சேர்ந்த அசோக்(எ)அசோக் பிரதாபன்(19), இமான்(எ)வேல் (24) மற்றும் திண்டிவனத்தை சேர்ந்த செல்வம்(23) ஆகியோரை கடந்த 9ம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் முக்கிய குற்றவாளியான செல்வம் என்பவனை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, போதை மாத்திரைகள் மும்பையில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. உடனே சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விறப்னை செய்த நபர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளி செல்வத்தை மும்பைக்கு அழைத்து சென்று போதை மாத்திரைகள் விற்பனை செய்து மும்பை போரா பஜார் தெருவில் உள்ள ‘ஜீனோ ஹெல்த் மெடிக்கல்ஸ்’ கடையில் பணியாற்றிய வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அடில் ஜமால்(27), மகாராஷ்டிரா மாநிலம் சிந்துர்டர்க் பகுதியை சேர்ந்த அல்டஸ் ரம்ஜான் லஞ்சேகர்(25) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 105 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போதை ஊசி பயன்படுத்தி கல்லூரி மாணவன் உயிரிழந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்த அண்ணாசாலை போலீசாரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.

The post லாட்ஜில் போதை ஊசி செலுத்தி மாணவன் உயிரிழந்த விவகாரம்; போதை மாத்திரை சப்ளை செய்த மும்பையை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: