1931-க்கு பிறகு வரலாறு காணாத மழை.. நாளையும் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் கனமழை பெய்யும்: தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி

சென்னை: தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களில் 20செ.மீ-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும். நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

1931-க்கு பிறகு பாளையங்கோட்டையில் இருமடங்கு மழை
பாளையங்கோட்டையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதற்கு முன் 1931-ல் பாளையங்கோட்டையில் பெய்த 20 செ.மீ. -தான் அதிகபட்ச மழை ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டையில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது.

மிக மிக பலத்த மழையை கணிக்க முடியாதது ஏன்?: வானிலை மையம் விளக்கம்
மிக மிக பலத்த மழையை கணிக்க முடியாதது ஏன்? என்பது குறித்து வானிலை மையம் விளக்கமளித்தது. மழை அளவை பொறுத்த வரையில் கனமழை, மிக கனமழை, அதி கனமழை என்ற 3 பிரிவுகளில் கணிக்கிறோம். 20 செ.மீ.க்கு மேல் பெய்யும் மழை அதி கனமழை என்று கூறுகிறோம். 20 செ.மீ.க்கு மேல் எவ்வளவு மழை பெய்யும் என்று கூறமுடியாது.

90 செ.மீ. மழை பெய்யும் என சொல்ல முடியாது:
95 செ.மீ. மழை பெய்யும் என்று ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பாலச்சந்திரன் விளக்கமளித்தார். 90 செ.மீ. வரை மழை பெய்யும் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில்தான் நகர்கிறது. அதி கனமழைதான்; மேக வெடிப்பு அல்ல என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வளிமண்டல அடுக்கு சுழற்சியால் கனமழை பெய்ததில்லை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில்தான் நகர்கிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு பெரிய மழை பெய்தது இதுவே முதல்முறை. வடகிழக்கு பருவமழை வருங்காலத்தில் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். குமரிக்கடல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.

The post 1931-க்கு பிறகு வரலாறு காணாத மழை.. நாளையும் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் கனமழை பெய்யும்: தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: