பொதுமக்களிடம் ரூ.150 கோடி மோசடி ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் மனைவி கைது

திருச்சி: ரூ.150 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் மனைவி நேற்று கைது செய்யப்பட்டார்.  திருச்சியை தலைமையிடமாக கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் செயல்பட்டு வந்தது. பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.150 கோடி வரை இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் அந்நிறுவன உரிமையாளர்கள் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மதன் செல்வராஜ் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, டிசம்பர் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் மதன் செல்வராஜ் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோதி, 7 நாள் ேபாலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த மோசடி சம்பவத்தில் மதன் செல்வராஜின் மனைவியான கார்த்திகா தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று திருச்சியில் வைத்து அவரையும் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் கார்த்திகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

The post பொதுமக்களிடம் ரூ.150 கோடி மோசடி ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் மனைவி கைது appeared first on Dinakaran.

Related Stories: