ஆவினுக்கு 15 ஆயிரம் லிட்டராக பால் குறியீடு உயர்த்த எதிர்ப்பு

*பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஜஸ்டின் தேவகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் 122 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் காணப்பட்டன. இவை மூலம் சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ஒன்றிய குறியீடான 7000 லிட்டர் பால் ஆவினுக்கு கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது 57 சங்கங்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் சுமார் 33 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் குமரி ஆவினானது தற்போது சங்கத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் குறியீடு நிர்ணயித்து உள்ளது. 57 சங்கங்களில் 33 சங்கங்களுக்கு வாகனம் அனுப்பி பால் எடுக்கப்படுகிறது. மீதமுள்ள சங்கங்களுக்கு ஒன்றிய வாகனங்கள் அனுப்புவதில்லை. 122 சங்கங்கள் இருக்கும்போது குறியீடு 7000 லிட்டர் ஆனது, ஆனால் 57 சங்கங்கள் இருக்கும்போது குறியீடு 15 ஆயிரம் லிட்டர் நிர்ணயித்து சங்கத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு குறிப்பாணை, சங்க செயலாளர்கள் மீது நடவடிக்கை போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.

சங்க பணியாளர்களுக்கு பால் விற்பனை செய்யும் லாபத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. தனியார் பால் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து பால் வாங்குகின்றனர். குமரி மாவட்டத்தில் எத்தனை விதமான பால் பாக்கெட் கம்பெனிகள் விற்பனை செய்தாலும் வாடிக்கையாளர்கள் சங்கங்களை நாடி, சங்க வெண்டர்களிடமே பால் வாங்குகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post ஆவினுக்கு 15 ஆயிரம் லிட்டராக பால் குறியீடு உயர்த்த எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: