இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலமானது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 23 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கிய விசாரணை மொத்தம் 16 நாட்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் நான் உட்பட அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த உத்தரவை பிறப்பிக்கிறோம்.இருப்பினும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகிய இருவரும் இந்த வழக்கு தொடர்பாக அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதனை தனி உத்தரவாக கருதி விடக்கூடாது என தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கியிருந்த சட்டப்பிரிவு 370யை ஒன்றிய அரசு ரத்து செய்தது செல்லத்தக்க ஒன்றாகும். மேலும் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த மறுசீரமைப்பு சட்டம் செல்லும். விரைவில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மேலும் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், இந்திய தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சி செல்லுபடியாகுமா என்பது குறித்தும், அதன் தன்மை குறித்தும் நாங்கள் தற்போது எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க போவது கிடையாது. ஏனெனில் மனுதாரர்கள் தரப்பில் அதுகுறித்து எந்தவித கோரிக்கையும் வைக்கப்படவில்லை.
மேலும் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 356ன் அதிகாரத்தை பயன்படுத்த நியாயமான தொடர்பை கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அது அங்கு சரியாக பயன்படுத்தப்பட்டதா என்றால் கேள்வியாக தான் இருந்தது. இதில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநிலத்தின் சார்பாக ஒன்றிய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கேள்விக்கு உட்பட்டது கிடையாது. அப்படி செய்யும் பட்சத்தில் அது அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் குடியரசு தலைவர் ஆட்சியின் போது மாநிலத்தில் ஏற்படும் மாற்ற முடியாத விளைவுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள முடியாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது.
குறிப்பாக ஜம்மு-காஷ்மீரை பொருத்தவரையில் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் தற்காலிக ஏற்பாடாக தான் கருதுகிறது. அதாவது ஜம்மு – காஷ்மீர் மாநிலமானது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது இந்திய அரசியலமைப்பின் ஒன்று மற்றும் 370வது பிரிவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் இல்லாமல் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அதனால் 370வது பிரிவை ரத்து செய்ய ஜம்மு-காஷ்மீர் அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது.
உன்மையை சொல்ல வேண்டும் என்றால் போர்கால சூழலை அடிப்படையாக கொண்டு தான் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதில் சட்டப்பிரிவு 362ஐ பயன்படுத்தி 370வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தங்கள் என்பது மிகவும் தீவிரமானது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. இதைத்தவிர சட்டப்பிரிவு மூன்று என்பது, மாநிலத்தின் ஒரு பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்ற அனுமதிப்பதால் தான், தற்போது லடாக் யூனியன் பிரதேசமாக மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போதே சில நேரங்களில் மாநிலங்களில் யூனியன் அதிகாரத்தின் வரம்புகள் வந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாகவோ அல்லது மாநிலமாகவோ மாற்றுவது என்பது நாடாளுமன்றத்திற்கு உண்டான அதிகாரமாகும். அதில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இறையாண்மையின் எந்த கூறுகளையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை. மேலும் அதற்கு உள்இறையாண்மையும் கிடையாது. குறிப்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370சட்டப்பிரிவு என்பது சமச்சீரற்ற கூட்டாட்சியின் அம்சமே தவிர, இறையாண்மைக்கு உட்பட்டது கிடையாது. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, பிரிவு 370ஐ ரத்து செய்த முடிவு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,‘‘ ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இந்தியாவில் உள்ள மாற்ற மாநிலங்களை போலவே ஜம்மு-காஷ்மீரும் ஒரேவிதமான சட்டவிதிமுறைகளை பின்பற்றும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
* நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்
பிரதமர் மோடி ‘புதிய ஜம்மு காஷ்மீர்’ என்ற ஹேஷ்டேக்குடன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை ரத்து செய்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இதன் மூலம் நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கு இது நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் உறுதியான அறிவிப்பு. உங்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்களின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று நான் உறுதி அளிக்கிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களை சென்றடைவதோடு, 370வது சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அவற்றின் பலன்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த தீர்ப்பு வெறும் சட்டத்தீர்ப்பு மட்டுமல்ல, இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு தீர்மானத்தின் சான்றாகவும் உள்ளது’’ என கூறி உள்ளார்.
* 3 மனுக்கள் வாபஸ்
இதில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுதாரர்களில், மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், ஐஏஎஸ் அதிகாரி ஷாபாசல் மற்றும் முன்னாள் மாணவ செயல்பாட்டாளர் ஷீலா ரஷித் ஆகியோர் தங்களது மனுவை முன்னதாக திரும்பப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
* உடனே தேர்தல்: காங். வலியுறுத்தல்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை மீண்டும் தர வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் 2024 செப்டம்பர் 30 வரை காத்திருக்க எந்த காரணமும் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு பல பிரச்னைகளை தீர்த்து வைத்தாலும், சிலவற்றை விட்டுவிட்டதாக நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக, மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக துண்டாடுவது குறித்த கேள்விக்கான முடிவை உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அது ஏமாற்றம் அளிக்கிறது. அந்த கேள்வி, எதிர்காலத்தில் பொருத்தமான வழக்கில் தீர்வு காண்பதற்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். காஷ்மீரின் ஒவ்வொரு குடிமகனின் கோரிக்கையும் ஜனநாயகமே தவிர, ஏதேச்சதிகாரம் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க பாஜ ஏன் பயப்படுகிறது’’ என்றனர்.
* நல்லிணக்க குழு அமைக்க நீதிபதி சஞ்சய் கிஷன் பரிந்துரை
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்போடு நான் ஒத்துப்போகிறேன். இருப்பினும் எனது தனிப்பட்ட கருத்தில், ‘‘குறிப்பாக சட்டப்பிரிவு 370ன் நோக்கம் என்பது ஜம்மு-காஷ்மீரை இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களுக்கு இணையாக கொண்டு வரவேண்டும் என்பதாகும். இருப்பினும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 367ஐ பயன்படுத்தி திருத்தம் செய்வது குறித்து ஒரு நடைமுறை பரிந்துரைக்கப்படும் போது, அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனால் முரண்பாடான சட்ட திருத்தமாக இருந்தால் அதனை அனுமதிக்க வேண்டியதில்லை.
இதில் குறைந்தபட்சம் 1980களில் இருந்த மாநில மற்றும் ஒன்றிய அரசின், சார்பற்ற நிறுவனங்களின் மனித உரிமைகளை விசாரித்து அறிக்கையாக வைக்கலாம். இதைத்தவிர நல்லிணக்ககத்திற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், நடுநிலையான உண்மை மற்றும் நல்லிணக்க குழுவை அமைக்க இதன் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன். அதனால் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியே என உத்தரவிட்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜ தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சரும், மூத்த பாஜ தலைவருமான ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில், ‘‘அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்கும் பிரதமர் மோடியின் முடிவையும், அதற்கு பின்பற்றப்பட்ட செயல்முறையையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வரலாற்றுத் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும்’’ என்றார். ‘‘காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்று கனவு கண்ட, நாட்டின் அனைத்து தேசியவாதிகளுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றொரு வெற்றி மற்றும் கொண்டாட்ட தருணம்’’ என்று ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். இதே போல, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என ஆர்எஸ்எஸ் வரவேற்றுள்ளது.
* பாகிஸ்தான் எதிர்ப்பு
பாகிஸ்தானின் பொறுப்பு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜலில் அப்பாஸ் ஜிலானி கூறுகையில், ‘‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியாவின் ஒருதலைப்பட்டசமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை சர்வதேச சட்டம் அங்கீகரிக்கவில்லை. எனவே இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எந்த சட்டப்பூர்வ மதிப்பும் இல்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி, காஷ்மீர் மக்களுக்கான சிறப்பு உரிமை பறிக்க முடியாதது’’ என்றார்.
* கடந்து வந்த பாதை
2018 டிசம்பர் 20: காஷ்மீரில் 6 மாத ஆளுநர் ஆட்சி ரத்து செய்யப்படாத நிலையில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ன் கீழ், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2019, ஜூலை 3ல் அது நீட்டிக்கப்பட்டது.
2019 ஆகஸ்ட் 5: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
2019 ஆகஸ்ட் 6: சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா முதல் மனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் ஷகிர் ஷபீரும் வழக்கு தொடர்ந்தார்.
2019 ஆகஸ்ட் 10: தேசிய மாநாட்டு கட்சி, மாநில அந்தஸ்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், அதன் குடிமக்களின் உரிமைகளை அவர்களின் அனுமதியின்றி பறித்துவிட்டதாகக் கூறி மனு தாக்கல் செய்தது.
2019 ஆகஸ்ட் 24: இந்திய பிரஸ் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
2019 ஆகஸ்ட் 28: பத்திரிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் தாக்கல் செய்த மனுவில், ஒன்றிய அரசு, காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
2019 ஆகஸ்ட் 28: அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
2019 செப்டம்பர் 19: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சை உச்சநீதிமன்றம் அமைத்தது.
2020 மார்ச் 2: ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்தது.
2023 ஜூலை 11: இந்த விவகாரத்தில் தினசரி விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தொடங்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2023 ஆகஸ்ட் 2: விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியது.
2023 செப்டம்பர் 5: இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்களை 16 நாட்களுக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
2023 டிசம்பர் 11: சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யும் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
* சரியான முடிவு என நிரூபணம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், ‘‘காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கான அரசின் முடிவை உறுதிப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். இதன் மூலம், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி எடுக்கப்பட்ட முடிவு முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த தொலைநோக்கு முடிவால் காஷ்மீரில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பியுள்ளது’’ என்றார்.
* ஏமாற்றம், ஆனாலும் போராட்டம் தொடரும்
தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஏமாற்றம், ஆனாலும் மனம் தளரவில்லை. எங்கள் போராட்டம் தொடரும். சட்டப்பிரிவு 370ஐ நீக்க பாஜ பல ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. நாங்களும் நீண்ட கால போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
* நம்பிக்கை இழக்க மாட்டோம்
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஜம்மு காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவோ, முயற்சியை கைவிடவோ போவதில்லை. எங்களின் கவுரவம், கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும். இது முடிவல்ல’’ என்றார்.
* கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில், ‘‘இது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அனைவரும் கனத்த இதயத்துடன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும். இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காஷ்மீர் வரலாற்றில் இது ஒரு சோகமான நாள்’’ என்றார்.
* வீட்டுக்காவலில் மெகபூபா, உமர்?
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதையொட்டி காஷ்மீரில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, அம்மாநில முன்னாள் முதல்வரகளான மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். மெகபூபா முப்தியின் வீட்டு கதவை போலீசார் சீல் வைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் டிவிட்டர் பதிவில் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதே போல, உமர் அப்துல்லா வீட்டின் கதவை பூட்டி யாரையும் அனுமதிக்கவில்லை என புகைப்படம் வெளியிட்ட அக்கட்சி, ‘இதுதான் ஜனநாயகமா?’ என கேள்வி எழுப்பியது. ஆனால், எந்த அரசியல் தலைவரும் கைது செய்யப்படவில்லை, வீட்டு சிறையில் வைக்கப்படவில்லை என காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் போலீசார் கூறி உள்ளனர்.
The post ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த உத்தரவு appeared first on Dinakaran.
