அதே நேரத்தில் மிக்ஜாம் புயல், பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கடந்த 4, 5ம் தேதி பொது விடுமுறை விடப்பட்டது. 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கவில்லை. மேலும் இந்த 4 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசின் கோரிக்கையை ஏற்று தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தது. அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகள் மட்டும் இயங்கியது.
தொடர்ந்து 6ம் தேதியும் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகு 7ம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மற்ற தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. தொடர்ந்து 8ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்
உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று வாரவிடுமுறை வேறு. இவ்வாறு ஒரு வார விடுமுறைக்கு பிறகு புயல், மழை பாதிப்பால் விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் 11ம் தேதி (இன்று) திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி ஒருவார விடுமுறைக்கு பிறகு இன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து கடந்த 3 நாட்கள் 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. நேற்று இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியது.
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. குப்பைகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமரும் இருக்கைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் உள்ள மின்சாதன பெட்டிகள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா? ஏதாவது பாதிப்பு உள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டது. கழிவறைகள் அனைத்தும் தூய்மை ெசய்யப்பட்டது. மேலும் தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளில் மணல் கொண்டு மூடப்பட்டது. இன்று மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. புயல் மழையால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்றே பாடபுத்தகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு திறக்கப்பட உள்ளதால் மாணவர்களும் உற்சாகமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
The post புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு appeared first on Dinakaran.
