சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு


சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24ம் தேதி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த 9 குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்(42) என்பவர், ‘நீட் மசோதா மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் மசோதவில் ஆளுநர் கையெழுத்து போடாததை கண்டித்து’ 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

அப்போது ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்து கிண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அன்று இரவே சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கருக்கா வினோத் மீது 9க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால் கிண்டி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையே என்ஐஏ அமைப்பு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது.

அக்.25-ம் தேதி ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சம்பந்த பட்ட ஆவணங்களை சென்னை காவல்துறை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சில தினங்களுக்கு முன்பு ஒப்படைத்தது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 பேர் மற்றும் தடவியல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகை முன்பு ஒன்றரை மணி நேரமாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சில்வானுவை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு  விசாரணைக்கு அழைத்து சென்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நாளன்று என்ன நடந்தது என்பது குறித்து ஆயுதப்படை காவலர் சில்வானுவிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர்.

The post சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: