உடல்நல குறைவால் விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க பரிசீலனை கடலூர் முதன்மை நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலூர், டிச. 9: உடல் நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி கடலூர் முதன்மை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்ட நீதித்துறையில் பணியாற்றிய ஊழியர் உடல் நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு வழங்கக் கோரியும், மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரியும் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி, விருப்ப ஓய்வுக்கு அனுமதியளித்தார். ஆனால் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி நீதித்துறை ஊழியரின் மகன் சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விருப்ப ஓய்வு பெற்ற போது, மனுதாரரின் தந்தை 53 வயதை கடந்து விட்டதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் மறுக்கப்பட்டதாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தை விருப்ப ஓய்வு பெற்ற போது 52 வயது 9 மாதங்கள் மட்டுமே. 5 ஆண்டுகளுக்கும் மேல் பணிக்காலம் உள்ளதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கையை கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி மீண்டும் புதிதாக பரிசீலித்து இரு மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post உடல்நல குறைவால் விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க பரிசீலனை கடலூர் முதன்மை நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: