மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் சக்கரபாணி

சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் இன்று (08.12.2023) பொது விநியோகத் திட்டத்தில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் குறித்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்ட அங்காடிகள் அனைத்தும் செயல்படுகின்றன. இந்த மாவட்டங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் 11 தவிர அனைத்து விற்பனை நிலையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 11 விற்பனை நிலையங்களும் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வீணான பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதற்குப் பதிலாகப் புதிய பொருள்களை வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்துக் கிடங்குகளிலும் நியாயவிலைக் கடைகளிலும் அனைத்துப் பொருள்களைப் பாதுகாப்பாக இருப்பு வைத்திடவும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி தரமாக வழங்குதலை உறுதிப் படுத்திடவும், தொடர்மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு நேர்வாக காய்கறிகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், டாக்டர் கே. கோபால், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் .ஹர்சஹாய் மீனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் ஆ. அண்ணாதுரை, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Related Stories: