தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி

சென்னை: சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள நீரால் சூழப்பட்டு தீவு போல் காட்சி அளிக்கிறது. சென்னை நகர் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடிந்தாலும், புறநகர் பகுதியான வேளச்சேரி, பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் மற்றும் வடசென்னை பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் ராட்சத மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி 24 மணி நேரமும் இடைவிடாமல் நடைபெற்று வந்தது.

இதன்மூலம் சென்னை நகர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும் சென்னையின் புறநகர் பகுதிகளை இன்னும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. படகுகள் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மிக்ஜாம் புயலால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். புயல், மழை வெள்ள பாதிப்பை பார்வையிட ஒன்றிய அரசின் பல்துறை குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: