ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை: தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதால் 20 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழையால் தலைநகர் சென்னை தீவாக மாறி உள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு நகரமே ஸ்தம்பித்து உள்ளது. ரயில், பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். புயல் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலை கொண்டு உள்ளதால் திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகள் தத்தளித்து வருகிறது. நாளை காலை வரை 50 செ.மீ மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(05.12.2023) செவ்வாய்க்கிழமை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: