17 ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு

தானே: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு 17 ரன் வித்தியாசத்தில் மத்தியப் பிரதேச அணியை போராடி வென்றது. தாதோஜி கோன்தேவ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு 49.5 ஓவரில் 195 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அபாரமாக விளையாடிய பாபா இந்திரஜித் 92 ரன் (115 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். பிரதோஷ் ரஞ்சன் 31, சாய் சுதர்சன் 21, நாராயண் ஜெகதீசன் 16, சாய் கிஷோர் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

மத்தியப் பிரதேச பந்துவீச்சில் ராகுல் பதாம், சரண்ஷ் ஜெயின், ஷுபம் ஷர்மா தலா 2, கார்த்திகேயா, மிஹிர் ஹிர்வானி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 196 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மத்தியப் பிரதேசம், 11.2 ஓவரில் 27 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ரஜத் பத்திதார் – வெங்கடேஷ் அய்யர் இணை 5வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தது.

வெங்கடேஷ் 27 ரன் எடுத்து ரன் அவுட்டாக, அடுத்து வந்த அக்‌ஷத் ரகுவன்ஷி 8, ராகுல் பதாம் 21 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ரஜத் பத்திதார் 73 ரன் (103 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அபராஜித் பந்துவீச்சில் ரஞ்சன் வசம் பிடிபட்டார். ஹிர்வானி 12, கார்த்திகேயா 6 ரன்னில் வெளியேற, மத்தியப் பிரதேசம் 47.4 ஓவரில் 178 ரன்னுக்கு சுருண்டது.

சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி தலா 3, நடராஜன், அபராஜித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 17 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற தமிழ்நாடு அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. இ பிரிவில் தமிழ்நாடு 5 போட்டியில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. பெங்கால் (5 போட்டி), மத்தியப் பிரதேசம் (6 போட்டி) அணிகளும் 16 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களில் உள்ளன.

கேரளா வெற்றி
ஆலூரில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் புதுச்சேரி அணியுடன் நேற்று மோதிய கேரளா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. புதுச்சேரி 32.2 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட் (ஆகாஷ் 25, கேப்டன் பபித் அகமது 44); கேரளா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன். ரோகன் குன்னும்மல் 23, விஷ்ணு வினோத் 22, அசாருதீன் 8, அப்துல் பசித் 5 ரன்னில் அவுட்டாகினர். சச்சின் பேபி 25 ரன், கேப்டன் சஞ்சு சாம்சன் 35 ரன்னுடன் (13 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post 17 ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: