அரை சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் இந்தியா 160 ரன் குவிப்பு

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணியுடனான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். வழக்கம்போல அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 21 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெஹரண்டார்ப் பந்துவீச்சில் எல்லிஸ் வசம் பிடிபட்டார்.

ருதுராஜ் 10 ரன்னில் வெளியேற… கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன், ரிங்கு சிங் 6 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜிதேஷ் ஷர்மா 24 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹார்டி பந்துவீச்சில் ஷார்ட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 13.1 ஓவரில் 97 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஷ்ரேயாஸ் அய்யர் – அக்சர் படேல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
இருவரும் 6வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தனர். அக்சர் படேல் 31 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெஹரண்டார்ப் வேகத்தில் ஹார்டியிடம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்தார். அவர் 53 ரன் எடுத்து (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எல்லிஸ் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற அவுட்டானார்.

ரவி பிஷ்னோய் 2 ரன் எடுத்து ரன் அவுட்டாக, இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. அர்ஷ்தீப் சிங் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பெஹரண்டார்ப், த்வார்ஷுயிஸ் தலா 2, ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் இணைந்து துரத்தலை தொடங்கினர்.

The post அரை சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் இந்தியா 160 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: