பெரியபாளையம் அருகே இன்று அதிகாலை பிளைவுட் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் சேதம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் இயங்கி வரும் ஒரு தனியார் பிளைவுட் நிறுவன குடோனில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பிளைவுட் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டன. இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே சிறுவாபுரி கிராமம், அம்பேத்கர் நகரில் ஒரு தனியார் பிளைவுட் தயாரிக்கும் நிறுவனம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்துக்கு இதன் அருகிலேயே ஒரு குடோன் உள்ளது. இதில் பலகோடி மதிப்பிலான பிளைவுட் பலகைகள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், இந்தத் தனியார் பிளைவுட் நிறுவனத்தின் குடோனில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியதில், குடோன் முழுவதும் தீப்பிடித்து, கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதை பார்த்ததும் அங்கு பிளைவுட் தொழிற்சாலையில் இரவு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்து, குடோனில் பரவிய தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். எனினும், அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து, குடோனில் பரவிய தீயை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் போராடி அணைத்தனர். இவ்விபத்தில், குடோனில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பிளைவுட் மற்றும் மூலப்பொருட்கள், இயந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனில் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post பெரியபாளையம் அருகே இன்று அதிகாலை பிளைவுட் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: