திருச்சி – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்

திருவெறும்பூர், டிச.3: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதை நெடுஞ்சாலைத்துறை சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை இரண்டு நிமிடத்திற்கு ஒரு புறநகர் பேருந்தும் 5 நிமிடத்திற்கு ஒரு மாநகர் பேருந்தும் செல்கிறது. மேலும் இந்த சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்வதுடன் இப்பகுதியில் தொழிற்சாலை நிறைந்த பகுதியாக உள்ளதால் சரக்கு வாகனங்களும் சென்று வருகிறது.

மேலும் இப்பகுதியில் அரசு ஐடிஐ, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, என்ஐடி, அரசு கலைக் கல்லூரி, உணவக மேலாண்மை கல்லூரி என அரசு கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளதாலும் இந்த சாலையில் ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இப்படி ஏராளமானோர் வந்து செல்லும் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும் மேடு பள்ளமாகவும் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டிய நெடுஞ்சாலை துறையினர் சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். இந்த சாலையின் அவலம் குறித்து பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேடு பள்ளங்களையும் குண்டு குழிகளையும் சரி செய்து வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்சி – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: