சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் டாக்டரிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஈ.டி அதிகாரி கைது: மதுரை அமலாக்கத்துறை ஆபீசில் ரெய்டு, உள்ளே விடாமல் தடுத்ததால் கடும் வாக்குவாதம்

மதுரை: அரசு டாக்டர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடத்தவிடாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பாஜ ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை ஆளுநர் அல்லது அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக அமலாக்கத்துறையின் மூலம் மாநில அமைச்சர்களிடம் விசாரணை செய்வது, கைது செய்து விசாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்து, அதன் அதிகாரிகள் அப்பழுக்கற்றவர்கள், அவர்கள் நேர்மையாகத்தான் செயல்படுவார்கள் என்ற போலியான பிம்பத்தை கட்டமைத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

உண்மையில் நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. டெல்லி, ராஜஸ்தான், அகமதாபாத் ஆகிய இடங்களில் லஞ்சம் மற்றும் சூதாட்ட வழக்குகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதாகியுள்ளனர். திரைமறைவிலும் ஏராளமான ரகசிய டீலிங் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்தில் சோதனை என்ற பெயரில் செல்லும் அதிகாரிகள் அவர்களின் சூழ்நிலை மற்றும் சொத்து விவரங்களை எல்லாம் அறிந்து அவர்களுக்கு சம்மன் அனுப்புவதுபோல் அனுப்பி ஒரு சில அதிகாரிகளை வைத்து லஞ்சம் கொடுத்தால் வழக்குகளில் இருந்து விடுவிக்கிறேன் என்று பேரம் பேசப்படுகிறது.

அவ்வாறு கிடைக்கும் பணத்தில் மேல்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை பங்கு போட்டு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மேல்மட்ட அதிகாரிகள் யாரும் சிக்குவதில்லை. இவ்வாறு நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர் அங்கித் திவாரி (32). இவர் 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, மத்தியப்பிரதேச அமலாக்கத்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர், மகராஷ்டிரா (நாக்பூர்), குஜராத் ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்கிருந்து ஆய்வாளர் அந்தஸ்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, கடந்த ஏப். 23ல் மதுரைக்கு வந்துள்ளார். மதுரைக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையில் தென் மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் விவரங்களையும், வழக்குகளின் தகவல்களையும் கேட்டு வாங்கியுள்ளார்.

அதில், திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த டாக்டர் சுரேஷ்பாபு என்பவர் மீதான வழக்கு ஆவணங்களையும் வாங்கியுள்ளார். சுரேஷ்பாபு, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, கடந்த 2018ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவரது மனைவி பெயரில் திண்டுக்கல்லில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ஏராளமான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்கித் திவாரி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு, ‘உங்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு இருக்கிறது. இது பிரதமர் அலுவலகம் மூலம் அமலாக்கத்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. நாங்கள் விசாரணைக்கு எடுக்க போகிறோம். விசாரணைக்கு எடுத்தால் உங்களுடைய சொத்துகள் அனைத்தும் முடக்கி பறிமுதல் செய்வோம். இதை தவிர்த்து வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும்.

இது எனக்கு மட்டும் இல்லை. உயர் அதிகாரிகள் வரை கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால், உங்களை மட்டுமல்லாமல் மருத்துவமனை உங்கள் மனைவி பெயரில் இருப்பதால் அவரையும் கைது செய்ய வேண்டியது வரும்’ என்று பேரம் பேசி உள்ளார். இதற்கு டாக்டர் சுரேஷ்பாபு மறுத்து உள்ளார். இருப்பினும் விடாமல் அவரை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டு தொடர்ந்து பேரம் பேசி வந்து உள்ளார். இறுதியாக ரூ.51 லட்சம் கொடு என்று அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டியுள்ளார். கடந்த மாதம் ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரி, டாக்டரின் வீட்டுக்குச் சென்று வாங்கியுள்ளார். அதன் பின்னர் மேலும் ரூ.31 லட்சம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

தீபாவளி முதல் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரியின் டார்ச்சரால் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் டாக்டர் சுரேஷ்பாபு புகார் கொடுத்து உள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய் குமார் சிங், இணை இயக்குனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி சரவணகுமார் விசாரணை நடத்தினார். இதில் டாக்டர் சுரேஷ்பாபுவை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியது உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படைஅமைக்கப்பட்டு, அங்கித் திவாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, டாக்டர் சுரேஷ்பாபு அங்கித் திவாரியை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சத்தை தருவதாக கூறி உள்ளார். உடனே அங்கித் திவாரி திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நகரின் பேகம்பூரை அடுத்துள்ள தோமையார்புரம் அருகே உள்ள டாக்டரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை டாக்டர் சுரேஷ்பாபுவை வர சொல்லி உள்ளார். அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தந்த ரசாயனம் தடவிய ரூ.20 லட்சம் பணத்துடன் அங்கித் திவாரி சொன்ன இடத்துக்கு டாக்டர் சுரேஷ்பாபு சென்று உள்ளார். அங்கு காரில் அங்கித் திவாரி காத்திருந்தார். டாக்டரை பார்த்ததும், பணத்தை கார் டிக்கியில் வைக்க சொல்லி உள்ளார். உடனே, ரசாயனம் தடவிய ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியின் கார் டிக்கியில் டாக்டர் வைத்து உள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை மடக்கி பிடிக்க சென்றனர். போலீசார் சாதாரண உடையில் இருந்ததால், என்ன நடக்கிறது என்று புரியாமல், அங்கித் திவாரி காரை படுவேகமாக மதுரை நோக்கி ஓட்டி சென்றார். உடனே, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அங்கித் திவாரியின் காரை விரட்டிச்சென்றனர். சுமார் 15 கி.மீ சென்ற அங்கித் திவாரியின் கார் கொடைரோடு சுங்கச்சாவடி டிராபிக்கில் மாட்டி நின்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

காரில்இருந்த லஞ்சப்பணம் ரூ.20 லட்சம், அவரது கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அங்கித் திவாரியை கைது செய்தனர். கைதான அங்கித் திவாரியிடம் திண்டுக்கல் இபி காலனியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு காலை 9 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் டிஎஸ்பி நாகராஜன் மற்றும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பின்னர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரணையின் போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை பழைய நத்தம் ரோடு, தபால் தந்தி நகரில் அங்கித் திவாரி பணியாற்றும் அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்த மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிகள் சத்யசீலன், சேதுமாதவன் தலைமையில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினருடன், மதுரை இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, சூரியகலா, ரமேஷ், பாரதிபிரியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை வந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள், ‘‘இது கண்காணிப்பாளர் அலுவலகம். எஸ்பி நிலையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வர வேண்டும்.

சோதனை நடத்தக்கூடாது. அமலாக்கத்துறை துணை இயக்குனர் ரவீஷ் வர உள்ளார். உயரதிகாரிகள் அனுமதிக்குப் பிறகே அனுமதிப்போம்’’ என்றனர். பொதுவாக ஒருவர் லஞ்சம் பெற்றால், அவரது அலுவலகம், வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவது வழக்கமான நடைமுறை எனத் தெளிவுபடுத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், மதுரைக்கான லஞ்ச ஒழிப்பு உயரதிகாரியின் தலைமையில், உரிய ஆவணங்களுடனேயே சோதனைக்கு வந்திருப்பதாகவும் கூறினர்.

சுமார் ஒரு மணிநேர கடும் வாக்குவாதத்துக்கு பிறகு மாலை 6 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் சென்று கதவுகளை மூடி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தங்களுடன் பிரின்டர் மற்றும் லேப்டாப்களையும் உடன் கொண்டு சென்றனர். அங்கித் திவாரியின் அறைப்பகுதி, இருக்கை, அவரது கம்ப்யூட்டர் என அலுவலகத்தின் ஒவ்வொரு இடத்திலும் சோதனை நடத்தினர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். சோதனையால் அமலாக்கத்துறை அலுவலகத்தின் வெளியே பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு கொடுத்த தகவலின்பேரில், அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் மற்றும் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மார்க்கண்டய் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் வந்தனர். அவர்கள் அலுவலகத்துக்குள் பாதுகாப்புக்கு நின்றனர். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கித் திவாரி லஞ்சம் கேட்ட விவகாரத்தில் அவர் தனித்து செயல்பட்டு இருக்க மாட்டார் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அங்கித் திவாரியிடம் நடத்தப்படும் விசாரணையில், பலரை மிரட்டி லஞ்சம் வாங்கியது தெரியவந்து உள்ளது.

இதில் அமலாக்கத்துறை உயரதிகாரிகளுக்கும் அங்கித் திவாரி பங்கு கொடுத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அமலாக்கத்துறை முக்கிய சில அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் நிலையில், இவர்களை உத்தமர்கள் போல் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* பிரதமர் அலுவலகம் பெயரை சொல்லி மிரட்டல் அங்கித் திவாரி அறையின் பூட்டை உடைத்து சோதனை
கைதான அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தபோது, அவரது அறையில் டாக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்ட சிலரிடம் லஞ்சம் வாங்கியது மற்றும் சில ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ‘‘பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்திருப்பதாலேயே, உங்களிடம் விசாரணை நடத்த வந்துள்ளேன்’’ என்றும் அங்கித் திவாரி, டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டியுள்ளார். மேலும், லஞ்சப்பணம் கேட்டு தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பியும், வாய்ஸ் மெசேஜ் மூலமும் பணம் கேட்டுள்ளார். இந்த செல்போன் பதிவுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதுதவிர, அங்கித் திவாரியின் வாக்குமூலத்தின் பேரில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அவரது அறைக்குள் சோதனை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அங்கித் திவாரியின் அறை பூட்டப்பட்டிருந்ததால், அதைத் திறக்காமல் அங்கிருந்தோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாவியை தர மறுத்தனர். இதைத்தொடர்ந்து பூட்டை உடைத்து அறைக்குள் சென்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

* அங்கித் திவாரி வீட்டிலும் ரெய்டு
டாக்டர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கு விவரங்கள் எப்படி கைதான அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு விவரங்களை ஆவணங்களாக அவரது வீட்டில் பதுக்கி உள்ளாரா அல்லது பென் டிரைவில் சேகரித்து வைத்து உள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை கோசாகுளம் புதூரில் உள்ள அங்கித் திவாரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

* பட்டியலை வைத்து பண வசூல் வேட்டை
அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் மதுரைக்கு மாற்றலாகி வந்ததும், மதுரை மண்டலத்தில் அளவுக்கதிகமாக சொத்துகள் சேர்த்தவர்கள் பட்டியலையே எடுத்துள்ளார். அந்த பட்டியலில், டாக்டர் சுரேஷ்பாபுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. டாக்டர் சுரேஷ்பாபு மீது 2018ல் லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிந்து, முடிக்கப்பட்டிருந்த நிலையில், அதை தான் கையில் எடுத்துக் கொண்டு வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறார். சுரேஷ்குமாரைப் போல பலரது பட்டியலையும் அங்கித் திவாரி சேகரித்துள்ளார்.

இந்த பட்டியலின் அடிப்படையில், லஞ்ச வசூல் நடத்தப்பட்டிருக்கிறதா, பேரம் பேசப்பட்டதா என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதேபோல் அங்கித் திவாரி இதற்கு முன்பு என்னென்ன வழக்குகளை கையிலெடுத்து விசாரித்தார் எனவும் அமலாக்கத்துறையினரிடம் பட்டியல் கேட்டு பெற்றனர்.

மாநில உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் உயரதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அலுவலக வாயிலில் நின்றபடி தகவல் தெரிவிக்க முயன்றனர். இதைக்கண்ட அமலாக்கத்துறை ஊழியர்கள் வெளியேறிச் செல்லும்படி கூறி, எந்த தகவலும் இங்கிருந்தபடி போனில் தெரிவிக்கக் கூடாது எனக் கண்டித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

* வங்கி பரிவர்த்தனையை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரி அங்கிட் திவாரிக்கு தரைத்தளத்திலும், மேல்தளத்திலும் இரு அலுவலகங்கள் உள்ளன. இதில் மாலை 6 மணி முதல் தரைத்தள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதுவரை நடந்த சோதனையில் அங்கிட் திவாரியின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, 2 எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இவர்கள் வங்கிகளின் பணப்பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.

* ஆர்எஸ்எஸ் பயிற்சி மையத்தில் படித்தவர்
பாஜக அரசு 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. 2016ம் ஆண்டு அமலாக்கத்துறைக்காக சிறப்பு தேர்வுகளை நடத்தியது. அதில், ஆர்எஸ்எஸ் நடத்தும் பயிற்சி மையத்தில் அங்கித் திவாரி படித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவருடன் தேர்வு செய்யப்பட்டு வடகிழக்கு மாநிலத்தில் பணியில் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். ஒரே நேரத்தில் தேர்வானவர்கள் கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி கைதான ஈ.டி. அதிகாரிகள்
* டெல்லியில் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கிழக்கு பிராந்திய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் ரிஷி ராஜ். டெல்லியில் உள்ள பன்நோக்கு மருத்துவமனையில் ஊழியர்களின் வைப்பு நிதியில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக அங்கு பணிபுரிந்த மேலாளர் ஒருவர் ரிஷி ராஜிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அங்கு சோதனைக்கு சென்ற அவர் பல்வேறு முறைகேட்டில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தார். மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றால் அபராதத்தொகையில் 20 சதவீதத்தை லஞ்சமாக தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர் கேட்டுகொண்டுள்ளார். இதையடுத்து ரூ.12 லட்சத்தை அவர் வாங்கும் போது கையும் களவுமாக ரிஷிராஜை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

* ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம், பஸ்ஸி பகுதியை சேர்ந்த விமல்புரா கிராமத்தை சேர்ந்தவர் நவல் கிஷோர் மீனா. இவர் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிட்பண்ட் வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க, நவல் கிஷோர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்பதாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையில் (ஏசிபி) ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கும்போது நவல் கிஷோர்மீனா, அவரது கூட்டாளி பாபுலால் மீனா ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

* ஐபிஎல் போட்டியில் ரூ.2,000 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், ஹவாலா ஆபரேட்டர் அப்ரோஸ் பத்தா என்பவர் ரூ.5,000 கோடிக்கு சட்டவிரோதமாக பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அகமதாபாத் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணையின்போது அப்போதைய அமலாக்கத்துறை இணை இயக்குநராக இருந்த ஜே.பி.சிங் மற்றும் உதவி இயக்குனர் சஞ்சய் குமார் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இது தொடர்பாக அவர்கள் 2 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் 2015ம் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜே.பி.சிங்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த தொழிலதிபர் அமந்தீப் சிங் தாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமந்தீப் சிங் தால் மீது வழக்குப்பதிவு செய்து செய்யாமல் இருக்க அமலாக்கத்துறையில் அப்போது உதவி இயக்குனராக இருந்த பவன் காத்ரி லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அமந்தீப் சிங் தாலிடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பவன் காத்ரி, அமலாக்கத்துறையில் பணியாற்றிய எழுத்தர் நிதேஷ் கோகரை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம்
தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அரசு ஊழியர்களை கைது செய்ய அல்லது வழக்குப்பதிவு செய்ய ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு 7ன் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அரசு, மாநில அரசு என்று வகைப்படுத்தப்படவில்லை. யார், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். வழக்கமாக ஒன்றிய அரசு ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் மீது லஞ்சப் புகார்கள் வந்தால் ஒன்றிய அரசுதான் கைது செய்யும். ஆனால் இதில், மாநில அரசு ஊழியரை மிரட்டி பணம் வாங்கியதால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முழு அதிகாரம் அரசுக்கு உள்ளது.

* சென்னையில் சோதனை: சாஸ்திரி பவன் மூடல் மேலும் பல அதிகாரிகள் கைதாகிறார்கள்
அங்கித் திவாரியிடம் நடத்திய விசாரணையில், அவர் இதுபோல பல பேரை மிரட்டி கோடிக்கணக்கில் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்துக் கொடுத்துள்ளார். அது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. அதுமட்டுமின்றி சென்னை, மதுரையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இந்த லஞ்ச ஊழலில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் பல அதிகாரிகள் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நியைில், நேற்று இரவு சாஸ்திரி பவன் இழுத்து மூடப்பட்டு, துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

* சிறையில் அடைப்பு
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், சுமார் 15 மணிநேரம் நடத்திய விசாரணையின் முடிவில், திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்றிரவு அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கித் திவாரியை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

The post சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் டாக்டரிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஈ.டி அதிகாரி கைது: மதுரை அமலாக்கத்துறை ஆபீசில் ரெய்டு, உள்ளே விடாமல் தடுத்ததால் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: