தொடரை வென்றது இந்தியா

ராய்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டி20 போட்டியில், 20 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ராய்பூரில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. ஜெய்ஸ்வால், ருதுராஜ் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. ஜெய்ஸ்வால் 37 ரன் (28 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார். ஷ்ரேயாஸ் 8 ரன், கேப்டன் சூரியகுமார் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இந்தியா 8.1 ஓவரில் 63 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில், ருதுராஜ் – ரிங்கு சிங் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தனர். ருதுராஜ் 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரிங்கு சிங்குடன் இணைந்த ஜிதேஷ் ஷர்மா அதிரடியில் இறங்க, இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். ஜிதேஷ் 35 ரன் (19 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி த்வார்ஷுயிஸ் பந்துவீச்சில் ஹெட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்சர் படேல் கோல்டன் டக் அவுட்டாக, ரிங்கு சிங் 46 ரன்னில் (29 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

தீபக் சஹார் 0, பிஷ்னோய் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. ஆவேஷ் கான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி கட்டத்தில் இந்தியா 7 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் த்வார்ஷுயிஸ் 3, பெஹரண்டார்ப், சங்கா தலா 2, ஹார்டி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து, 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் வாடே அதிகபட்சமாக 36(23 பந்து) ரன் விளாசினார். டிராவிஸ் ஹெட் 31 ரன், மேத்யு ஷாட் 22 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் அக்‌ஷார் படேல் 3 விக்கெட், தீபக் சாகர் 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. கடைசி டி20 போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.

The post தொடரை வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: