ஆண்டிபட்டி, நவ.30: சிவகங்கை மாவட்ட தண்ணீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 70.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒரு போக பாசனத்திற்காக அணையில் இருந்து பாசனக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வைகை அணையின் பூர்வீக பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட தண்ணீர் தேவைக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, வைகை பூர்வீக பாசன பகுதிகள் 1,2,3 பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வைகை பூர்வீக பாசன பகுதியில் 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 7 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் கடந்த 23ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 7 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1504 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 23ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அளவு குறைக்கப்பட்டு இன்று (நவ.30) காலை 9 மணிக்கு நிறுத்தப்படுகிறது.
இதனையடுத்து வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை (டிச.1) முதல் வருகிற 5ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 2 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், 3ம் நாள் 1500 கனஅடியும், 4வது நாளில் 1000 கனஅடியும், 5வது நாளில் 665 கனஅடியும் திறக்கப்பட உள்ளது. இந்த 5 நாட்களில் வைகை அணையில் இருந்து 619 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்டத்திற்கு 6ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
The post வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
