வீட்டிற்குள் முடங்கும் காலம் மலையேறிவிட்டது தமிழக மாணவிகள் உலகெங்கும் சாதிக்க வேண்டும்: கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திருப்பூரில் உள்ள வஞ்சிப்பாளையத்தில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்து பேசியதாவது: தீரன் சின்னமலை என்ற பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது. அவரது பெயரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வைத்ததற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் 1991ம் ஆண்டு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இன்றைக்கு 3,135 மாணவ- மாணவியர்கள் பயின்றுவரும் மிகப்பெரிய பள்ளியாக உயர்ந்துள்ளது.

இதன் அடுத்தகட்டமாக மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி கட்டப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் பள்ளிகளை கட்ட திட்டமிட்டுள்ளனர். கல்லூரி தொடங்கிவைத்தல் மற்றும் பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டுதல் என இரண்டு பணிகளையும் எனக்கு அளித்தமைக்கு நன்றி. கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க 28 ஏக்கர் நிலம் வாங்கி அதிமுக ஆட்சி காலத்தில் அனுமதி கிடைக்காமல் இருந்தது.

ஆனால், புதிய ஆட்சி வந்தபின் இதுகுறித்தான கோரிக்கை என்னிடத்திலே வைக்கப்பட்டபோது நான் நேரடியாக கண்காணித்து நிலவகையை மாற்றி கொடுத்து, கல்லூரி கட்டுவதற்கு இருந்த தடையை முதலில் நீக்கினேன். இதன் பின்னர் உயர்கல்விதுறை அனுமதி, கட்டிட அனுமதி உள்ளிட்டவைகளை வழங்க ஆணையிட்டு அதனையும் நிறைவேற்றிகொடுத்தோம். இந்த கல்லூரியை நேரில் வந்து திறந்து வைக்க ஆசைப்பட்டேன். ஆனால், எனது உடல்நிலை காரணமாக நீண்ட தூரப்பயணத்தை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிய காரணத்தால் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளேன்.

ஒரு காலத்தில் கல்வி என்பது எளிதாக கிடைக்கவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி இன்றைக்கு எல்லோருக்கும் கிடைக்கிறது என்றால் அதற்குள் ஏராளமான போராட்டங்கள் உள்ளன. நீதிக் கட்சி காலம் முதல் சமூகநீதியை வலியுறுத்தி வரக்கூடிய சமூக சீர்திருத்த தலைவர்களால் தான் இந்த மாற்றம் சாத்தியமானது. காமராஜர் பள்ளி கல்வியை ஊக்கப்படுத்தினார். அதனை உயர்கல்வியாக கலைஞர் விரிவுபடுத்தினார். திரும்பும் திசையெல்லாம் பள்ளி – கல்லூரி இருப்பதால்தான் இன்றைக்கு வீடுகள் தோறும் பட்டதாரிகள் உள்ளனர்.

மற்றொருபுறம், உங்களை போன்று சமூக சேவை மனப்பான்மையோடு பள்ளி – கல்லூரிகளை தொடங்கியது தான். அதனால் தான் கல்வி நீரோடை நாடு முழுவதும் பாய்கின்றன. இதனை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் கல்லூரி கல்வி, உயர்கல்வியை நிறைய படிக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்து விட்டு உயர்கல்விக்கு வரும் பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்குகிறோம். பெண்களுக்கு விடியல் பயணம் என கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். என்னுடைய கனவு எல்லாம் தமிழக மாணவ – மாணவிகள் உலகெங்கும் சாதிக்க வேண்டும். நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

பெண்கள் வீட்டிற்குள் முடங்கும் காலம் மலையேறி போய்விட்டது. வாருங்கள் உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது. படித்து முன்னேறி வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது. இதற்கெல்லாம், அரசு மாதிரியே சமூகநல அமைப்புகளும் கல்வி, மருத்துவம் போன்றவற்றில் சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரைக்கும் இலவசமாக…இல்லையென்றால் குறைந்த கட்டணத்தில் அந்த சேவையை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். ஒரு காலத்தில் கல்வி என்பது எளிதாக கிடைக்கவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி இன்றைக்கு எல்லோருக்கும் கிடைக்கிறது என்றால் அதற்குள் ஏராளமான போராட்டங்கள் உள்ளன.

The post வீட்டிற்குள் முடங்கும் காலம் மலையேறிவிட்டது தமிழக மாணவிகள் உலகெங்கும் சாதிக்க வேண்டும்: கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: