காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 2 பேர் சிக்கினர்: செல்போன்கள் பறிமுதல்

நித்திரவிளை: குமரியை சேர்ந்த இளம்பெண்ணை, மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தனது காதலனுடன் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் பொழியூர் அடுத்த பருத்தியூர் என்ற இடத்துக்கு சென்றார். இவர்களுடன், காதலனின் நண்பரும் சென்றார். அப்போது, திடீரென அப்பகுதிக்கு வந்த கும்பல், காதலனையும் அவரது நண்பரையும் மிரட்டி நிர்வாணமாக்கி தாக்கினர். பின்னர் இளம்பெண்ணை மிரட்டி 2 பேர் பலாத்காரம் செய்தனர்.

அதை வீடியோ எடுத்தனர். இந்த சம்பவத்தை வெளியில் கூறினால், வீடியோவை வைரலாக்குவோம் என மிரட்டினர். பாதிக்கப்பட்ட இளம்பெண், பொழியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுத்தது போன்று, வீடியோவை அழித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறினர். இதற்கிடையில் பலாத்கார வீடியோவை சக நண்பர்களுக்கு அந்த கும்பல் அனுப்பியது. அந்த வீடியோ கேரளா மற்றும் குமரி மாவட்டம் நித்திரவிளை, கொல்லங்கோடு சுற்று வட்டார பகுதிகளிலும் வைரலானது. அதில் காதலனையும் அவரது நண்பரையும் தாக்கும்போது, ‘எங்களை அடிக்காதீர்கள் என்று வாலிபர்கள் அழுவதும், இளம் பெண்ணை வீடியோ எடுக்கும்போது, தனது கையால் முகத்தை மூடும் போது வலுக்கட்டாயமாக நீக்க கூறி மிரட்டுவதும், பின் ஆடையை அகற்ற மிரட்டுவதும், இளம்பெண் அழுவதவாறு என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்று கதறுவதுமாகவும் இருந்தது. போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தன.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொழியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடினர். அவர்கள், கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு நேற்று கரைக்கு வந்தனர். இதையறிந்த போலீசார் இன்று காலையில் விரைந்து சென்று இருவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் மீது பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. பிடிபட்ட 2 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பலாத்கார வீடியோக்களை யார், யாருக்கு அனுப்பினர் என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது. இந்த வீடியோவில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

The post காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 2 பேர் சிக்கினர்: செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: