திருவாரூர் மாவட்டத்தில் 2 கட்டமாக 2 லட்சம் மகளிருக்கு கலைஞர் உரிமை தொகை

திருவாரூர், நவ. 29: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டு காலத்திற்குள்ளாகவே தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ ஆயிரம் வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15ந் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்து மகளிருக்கு உரிமை தொகைக்கான ஏ.டி.எம் அட்டையினை வழங்கினார். இதனையடுத்து மாவட்ட தலை நகரங்களில் அமைச்சர்கள் மூலம் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஏ.டி.எம் அட்டையினை வழங்கினார். மேலும் மாவட்டத்தில் 771 நியாயவிலை கடைகளில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 748 குடும்ப அட்டைதாரர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கான விண்ணப்பங்கள் பதிவுமுகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 590 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் இது மொத்த குடும்ப அட்டையில் 81.33 சதவீதம் ஆகும்.

ஏற்கபடாத விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் மாதம் 18ந் தேதி முதல் 26ந் தேதி வரையில் அவர்களது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. மேலும் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தாங்கள் உரிமைதொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் தான் என கருதினால் அவர்கள் அரசு இ& சேவை மையத்தில் கட்டணமில்லாமல் மேல்முறையீடு செய்யலாம் என்பதுடன் தங்களது விண்ணப்பத்தின் நிலையை தாலுகா அலுவலகங்களின் உதவி மையங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலம் வரையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மகளிர் விண்ணப்பித்தனர். இதனையடுத்து இவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட மகளிரில் தகுதியுடைய 7 லட்சத்து 34 ஆயிரத்து 300 விண்ணப்பதாரர்களுக்கு 2ம் கட்டமாக இந்த கலைஞர் மகளிர் உரிமைதொகை வழங்கும் திட்டத்தினை சென்னையில் கடந்த 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் குறித்து கலெக்டர் சாரு கூறுகையில், மாநில அளவில் முதல் கட்டமாக ஒரு கோடி 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கும், 2ம் கட்டமாக 7 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயனாளிகள் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் பயன்பெற்று வரும் நிலையில் மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 லட்சத்து 18 ஆயிரம் மகளிரும், 2ம் கட்டமாக 10 ஆயிரம் மகளிரும் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரம் மகளிர் பயன்பெற்று வரும் நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்ட 19 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என அடுத்த மாதத்திற்குள் மனுதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 2 கட்டமாக 2 லட்சம் மகளிருக்கு கலைஞர் உரிமை தொகை appeared first on Dinakaran.

Related Stories: