நிரப்பாத ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கி அதிமுக மாஜி அமைச்சர் ஜெயபால் ₹13 கோடி பணம் கேட்டு மிரட்டுகிறார்: கமிஷனர் ஆபீசில் சென்னை தொழிலதிபர் பரபரப்பு புகார்

சென்னை: எனது நிறுனத்தில் ₹7.50 கோடி முதலீடு செய்துவிட்டு, நிரப்பப்படாத ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டு ₹13 கோடி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மிரட்டுவதாக சென்னை தொழிலதிபர் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவான்மியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் என்பவர், நேற்று முன்தினம் அளித்த புகார் மனு:
சென்னை அண்ணாநகரில் ஏசிடிசி ஸ்டூடியோ பிரவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கு கடந்த ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரதீஷ் ஜெயபால் அறிமுகமானார். அவர் என்னிடம் பெருமளவு பணம் உள்ளது. அதை நான் எதிலாவது முதலீடு செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். நான் கேட்டுக்கொண்டதும் எங்களது ஈஷா கிருபா இன்ஜினியரிங் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தில் ₹7.50 கோடி முதலீடு செய்தார். பல நாட்கள் கழித்து நிரப்பப்படாத ₹100 மற்றும் ₹50 ஸ்டாம்ப் பேப்பர்களில் பல கையெழுத்துக்களை என்னிடம் கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டார்.

பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் ரிதீஷ் ஜெயபால், தான் முதலீடு செய்த ₹13 கோடியை திரும்ப கொடுக்கும்படி கேட்டார். அதற்கு நான் நீங்கள் முதலீடு செய்தது ₹7.50 கோடி தான் என்று சொன்னேன். எனக்கு அதெல்லாம் தெரியாது நீ எனக்கு ₹13 கோடி கொடுத்தால் உன்னை சும்மா விடுவேன். இல்லை என்றால் நீயும் இருக்க மாட்ட, உன் குடும்பமும் இருக்காது என்று மிரட்டினார். அவர்கள் என்னிடம் பெற்ற கையெழுத்தை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி பகல் 12 மணிக்கு என் வீட்டிற்கு ரிதீஷ் ஜெயபால் தூண்டுதலின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் 10 அடியாட்கள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது ஜெயபால் என் மகன் கேட்ட ₹13 கோடியை எடுத்து வை என மிரட்டினார். உனக்கு 2 நாள் டைம், அதற்குள் பணத்தை கொடுக்கவில்லை என்றால், உன்னையும், உன் குடும்பத்தையும் கல்லை கட்டி கடலிலேயே இறக்கி விடுவேன். உனக்கு பணமா அல்லது உன் குடும்பமா என்று நீயே முடிவு செய் என்று மிரட்டிவிட்டு சென்றார்.

எனவே ரிதீஷ் ஜெயபால் தூண்டுதலின் பேரில் என்னையும் எனது குடும்பத்தினரையும் அடியாட்களோடு வந்து மிரட்டி சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் அவருடன் வந்த 10 அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post நிரப்பாத ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கி அதிமுக மாஜி அமைச்சர் ஜெயபால் ₹13 கோடி பணம் கேட்டு மிரட்டுகிறார்: கமிஷனர் ஆபீசில் சென்னை தொழிலதிபர் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: