பனிப்பொழிவால் மல்லிகை விளைச்சல் பாதிப்பு: விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஆறுதல்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் பனிப்பொழிவால் மல்லிகைப் பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விலை உயர்வால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். மலர்களில் மல்லிகைக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. முகூர்த்தம் மற்றும் திருவிழாக்காலங்களில் கிலோ ரூ.1000 முதல் 3 ஆயிரம் வரை மல்லிகைப் பூக்கள் விற்பனையாகும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் மல்லிகை விளைச்சல் அமோகமாக இருந்தது. விலையும் சராசரியாக கிடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக பெய்துவரும் தொடர்மழை மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்து வரும் பனியால், மல்லிகைச் செடிகளில் உள்ள அரும்புகள் கருகி வருகின்றன. மேலும் செடியின் வளர்ச்சி குறைந்து, தளைவது முற்றிலும் நின்றுவிட்டது, இதனால் கடந்த மாதம் 10 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயி, தற்போது ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ மட்டுமே கொண்டு வரும் நிலை உள்ளது. நிலக்கோட்டை பகுதியில் சராசரியாக 5 டன் வரை மல்லிகைப் பூக்கள் விளைச்சல் கிடைக்கும். ஆனால், தற்போது ஒரு டன்னுக்கும் குறைவாகத்தான் விற்பனைக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து குறைவால், மல்லிகைப் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.200க்கு விற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ரூ.2 ஆயிரம் முதல் 2500 வரை விற்பனையாகி வருகிறது. இதனால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

The post பனிப்பொழிவால் மல்லிகை விளைச்சல் பாதிப்பு: விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: