அதிமுக மாஜி அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ், அதிகார துஷ்பிரயோகம் செய்து பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல கடந்த 2015 முதல் 2021ம் ஆண்டு வரை பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 2028 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் ஆனால் 2 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது; 6 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நீதிமன்றம் தீர்மானிக்கும் தேதியில் இரு புகார்தாரர்கள் வாக்குமூலமும் பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார். 6 மாதங்களில் விசாரணை முடிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு உத்திரவாதத்தை ஏற்ற நீதிபதி, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6ல் புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.

The post அதிமுக மாஜி அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: